Friday, July 22, 2016

பூவாடைக்காரி

முனைவர்.சுபாஷிணி

தெய்வங்கள் மனிதர்களைப் படைத்தன என ஒரு சாரார் சொல்கின்றார்கள். மனிதர்கள் படைத்த தெய்வங்கள் பற்றி சில தகவல்கள் தரலாம் என நினைக்கின்றேன்..

1. பூவாடைக்காரி

தமிழகத்தின் கிராமப்புறப்பகுதிகள் பல கதைகளை உள்ளடக்கியவை. இப்படித்தான் தெய்வங்களும்! ஒரு கிராமத்தில் ஒரு கோயில் இருக்கும். அங்குச் சென்று கேட்டால் அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு பெயர் சொல்வார்கள். காரணத்தைத் தேடினால் அதன் பின்னணியில் ஒரு கதை இருப்பது தெரிய வரும்.
இப்படித்தான் அண்மையில் ஒரு நூலில் பூவாடைக்காரி என்ற பெண் சாமி உருவான கதையை வாசித்து அறிந்து கொண்டேன்.
தஞ்சையை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பாளையக்காரர்கள் ஆளும் வகையில் ஏற்பாடு இருந்தது. இந்தப் பாளையக்காரர்களின் படை வீரர்களில் பலர் குடிகாரர்களாகவும் பெண்பித்தர்களாகவும் இருந்திருக்கின்றனர். அப்படி தஞ்சையின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்த தரங்கம்பாடியில் பெண் குழந்தைகள் பூப்படைந்து விட்டால் அச்செய்தி இந்த வீரர்களுக்கு எட்டினால் அந்தப் பெண் பிள்ளைகளைக் கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவர்களைக் கொன்று விடுவதோ அல்லது டச்சு நாட்டு வணிகர்களுக்கு அடிமைகளாக விற்பதோ என்ற வகையிலான அவலம் நடந்திருக்கின்றது.
இத்தகைய கொடுமையிலிருந்து தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற பெற்றோர் சிலர் முடிவு செய்து செயல்படுத்தியிருக்கின்றனர். அதாவது அவர்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் பூப்படைந்து பெரியவளானால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு குழியைத் தோண்டி அக்குழிக்குள் எண்ணெய் விளக்கொன்றை வைத்து அதை ஏற்றி வைக்கும் படி அச்சிறுமியிடம் சொல்வார்களாம், குழந்தை உள்ளே சென்றதும் மண்ணைத் தள்ளி குழியை மூடி விடுவராம்.
பிறகு சில சடங்குகளைச் செய்து அங்கே பூ, பழம் சாம்பிராணி ஏற்றி, அச்சிறுமி இறந்த இடத்தைக் கோயிலாக அமைத்து தெய்வமாகச் அச்சிறுமியை வழிபட்டிருக்கின்றனர். பின்னர் நாள்தோறும் அங்கே மாலையில் விளக்கேற்றி அச்சிறுமி இறந்த நாளைப் பக்தி உணர்வுடன் ஆராவாரத்துடன் வழிபட்டு வந்துள்ளனர். பாளையக்காரர் பின்னர் வீட்டுச் சிறுமி பற்றி விசாரித்தால் அம்மை நோய் வந்து அவள் இறந்து போனாள் எனச் சொல்லி சமாளித்திருக்கின்றனர்.
இப்படிப் பெற்றோராலேயே கௌரவக் கொலை செய்யப்பட்ட சிறுமிகளைப் பூவாடைக்காரி எனப் பெயரிட்டு வணங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது.
சிறுமியர் இப்படி கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் என்று அறியும் போது மனம் பதைபதைக்கின்றது. கொடிய பாளையக்காரர்கள், அவர்தம் அதிகாரிகளிடமிருந்து தம் வீட்டுக் குழந்தைகள் தப்பித்து வாழ முடியாது என எண்ணும் பெற்றோர் தாமே தம் குழந்தைகளை இப்படிக் கொன்று சாமிகளாக ஆக்கியிருக்கின்றனர்.
பூவாடைக்காரி பிறந்த கதை இது. இன்னும் எத்தனை எத்தனை சாமிகள் மனிதர்கள் கொடுமைகளினாலும் இயலாமைகளினாலும் உருவாக்கப்பட்டார்கள் எனத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறேன்.

நூல் குறிப்பு: தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி- ஆ.சிவசுப்பிரமணியன்.
அன்புடன்
சுபா
குறிப்பு - தரங்கம்பாடி பகுதி பற்றி அறிந்தோர் இந்த சாமி பற்றி மேலதிக தகவல் அறிந்தால் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்

5 comments:

  1. Dr. Subashini thanks for your info. I'm searching origin of the poovadaikari temlle, kindly let you know the address of that temple please

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி எதற்காக பூவாடைக்காரியைப் பற்றி தெரிந்து கொண்டோம்.சிவயநம

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி நாங்கள் பூவாடைக்காரி படையல் பற்றி தெரிந்து கொண்டோம்.சிவயநம

    ReplyDelete
  4. மேலே உள்ள பூவாடை காரி கதை வே. சத்திரம் கிராமம் பண்ருட்டி தாலுகாவிற்கு உட்பட்ட நெய்வேலி தொகுதியைச் சேர்ந்த கோ சத்திரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மதுரை வீரன் வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் ஆகிய குலதெய்வமான எங்களுடைய குளத்தில் பிறந்த ஒரு பெண் தேவதை அந்த தேவதை தான் பூவாடைகாரி என்றும் புடவைக்காரி என்றும் அழைக்கப்பட்டன அந்த குடும்பத்தில் பிறந்த பெண் முந்தைய காலத்தில் வாழ்ந்த எங்களின் மூதறிஞர் மற்றும் பங்காளிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராகவா படையாட்சி குடும்பமாக மதுரையிலிருந்து குதிரை சவாரி செய்து வரும்பொழுது வேகாக்கொல்லை மதுரா என்ற கிராமத்திற்கு சொந்தமான சத்திரம் கிராமத்தில் தோன்றி தோன்றிய வரலாறு அப்பொழுது பெரும் புயல் மழை காற்று வீசியதில் காரணமாக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டு மூத்தவர்கள் பெரியவர்கள் அனைவரும் முறையிட தெய்வங்கள் இல்லை என்பது ஐதீகம் அப்படி வழிபட்டு அழுது கொண்டு இருக்கும் பொழுதுதான் எங்கள் குல தெய்வத்தின் பிறந்த ஒரு பெண் இதோ நான் இருக்கின்றேன் யாரும் கண்ணீர் விட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு ஒரு சில அறிவுரை வழங்குகிறார் அந்த புடவைகாரி பூவாடைக்காரி ஆக நான் திரும்பி வந்து விடுவேன் நீங்கள் நான் சொல்வதை தெளிவாக கேட்டு அதன்படி வழி நடத்துங்கள் என்று அறிவுரை கூறுகிறாள் அவரின் பெற்றோர்களும் கூட பிறந்த பிறப்புகளும் செய்வதறியாமல் அழுது கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தன் குல தெய்வமான பெண் கூறுவதை கேட்டு சொல் மகளே என்று கூறுகிறார்கள் தற்பொழுது குலதெய்வமான புடவைக்காரி நான் சொல்வது என்னவென்றால் இந்த ஊரை காப்பாற்ற வேண்டுமென்றும் எனது மனதில் தோன்றியது மாய மாயத்தோற்றம் அல்ல உண்மையை சொல்லுகிறேன் என்று தன்னுடைய குல தெய்வத்திற்கு தாய் தந்தை பங்காளி அனைவரையும் கூப்பிட்டு நல்ல சேலையை வாங்கி கொடுங்கள் வளையல் மணி குங்குமம் மஞ்சள் அனைத்தும் கொண்டு வாருங்கள் என்று எங்களைப்போல சோதனை சோடித்து மங்களகரமான தோட்டத்தை உருவாக்கி உடனே என் கூட வாருங்கள் என்று கோச் சத்திரம் தோன்றிய ஏரி ஏரி உருவான கதையும் பூவாடைக்காரி என்னவென்றால் நான் ஏரியின் குறுக்கே படுத்து கொள்கிறேன் என் மீது மண்ணை மண்வெட்டியால் வெட்டி மேலே போடுங்கள் என்று கூறியது அனைவரையும் கண்ணிலிருந்து ஆத்திரத்தையும் வேதனையும் அழுது தீர்த்தார்கள் யாரும் வர வேண்டாம் என் மேலேயே மண்ணை வெட்டி போடுங்கள் என்று கதறுகிறாள் பூவாடைக்காரி உடனே எங்கள் குலதெய்வத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் மண்ணை வெட்டி அப்பெண்ணின் மேலே மூடுகிறார்கள் உடனே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது நின்றுவிட்டது உடனே மண்ணை வெட்டிப் போட்டுவிட்டு அம்மா என்று கூப்பிடுங்கள் நான் வந்துவிடுகிறேன் என்று சொல்லுகிறாள் அதேபோல மண்ணை வெட்டிப் போட்டுவிட்டு மூடியதும் அம்மா என்று கூக்குரல் கூப்பிட்டார்கள் இந்த பூவாடைகாரி நேற்று இரவோடு இரவாக வீட்டிற்குள் வந்து விட்டால் நான் உருவம் தெரியவில்லை அறையில் சத்தம் கொலுசு சத்தம் மஞ்சள் வாசனை சலசல என்று கொலுசு சத்தத்துடன் காட்சியளிக்கிறாள் வீட்டினுள் அன்றிலிருந்து இன்றுவரை ஊரில் உள்ள அனைவருக்கும் நாள் பூவாடைகாரி என்ற விருந்து வைத்து படையல் உடன் சுமங்கலிகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது அதில் உருவானதுதான் புடவைக்காரி என்கின்ற பூவாடைகாரி யாக காட்சி அளித்து வருகிறாள் தொடர்பு சாமிநாத படையாட்சி குமாரர் பெருமாள் படையாட்சி மகன் முத்துக்குமரன்

    ReplyDelete
  5. நன்றி முத்துக்குமார் நண்பரே...எங்கள் இனத்திலும் பரவலாக இந்த புடவைக்காரி அம்மன் வழிபாடு உள்ளது.. நாங்கள் மலைவாழ் காராளர் கவுண்டர் (தமிழ் மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர் ) இனத்தை சார்ந்தவர்கள்.

    ReplyDelete