Tuesday, May 5, 2015

பச்சை வாழி அம்மன் வரலாறு!


கீதா சாம்பசிவம்

 இவள் அன்னையின் அம்சமே ஆவாள்.

திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம்.  ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”,  என வினவினாள் அன்னை.  அனைத்தும் அறிந்தவளுக்கு அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாத ஒன்றா? புரியாத ஒன்றா?  இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல் செய்ய எண்ணி இருப்பதைப் புரிந்து கொண்டார் ஐயன்.  “ஆம் இருவரும் என் கண்களே”  என்றார்.  உடனே அன்னை தன்னிரு தளிர்க்கைகளாலும் ஐயனின் கண்களைப் பொத்த அன்டசராசரங்களிலும் காரிருள் சூழ்ந்தது.  அத்தனை ஜீவராசிகளும் திடீரென ஏற்பட்ட இந்தக் காரிருளைக் கண்டு நடுங்கித் தவித்தன.  தேவாதிதேவர்கள் மஹாபிரளயமோ என அலறிக்கொண்டு ஈசனிடம் ஓடி வந்தனர்.  வந்ததும் தான் புரிந்தது அன்னையின் விளையாட்டு என்பது.  அதற்குள் ஐயன் தன் நெற்றிக்கண்ணைச் சிறிதே திறக்க அனைத்து உலகும் ஒளியால் மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்தது.




தன் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டால் நடுங்கிப் போன அண்டசராசரத்து மக்களையும் நினைத்து வருந்திய அன்னையவள், தான் மாபெரும் பாவம் செய்துவிட்டதை உணர்ந்தாள். ஐயனை விட்டுப் பிரிந்து சென்று கடும் தவம் செய்து இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள விரும்பினாள்.  ஐயனிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அன்னையின் நோக்கம் புரிந்த ஈசனும் காஞ்சிமாநகரில் கம்பா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்லிக் கட்டளை இட்டார்.  ஐயனின் கட்டளையைச் சிரமேற்றாங்கி அன்னையவளும் கம்பாநதிக்கரையில் சுற்றிலும் அக்னியை வளர்த்து பஞ்சாக்னிக்கும் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள்.  அவள் கடுந்தவத்தைப் பார்த்த ஈசன் சற்றே சோதிக்க எண்ணிக் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார்.  வெள்ளம் தான் பிரதிஷ்டை செய்திருக்கும் லிங்கத் திருமேனியை அடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது எனக் கலங்கிய அன்னை தன்னிரு கைகளாலும் லிங்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.  அப்போது ரிஷபவாஹனராய்க் காட்சி தந்தார் ஈசன்.  அன்னை அவரை வணங்கி அவரில் தான் பாதியாக விரும்புவதைக் கூறினாள்.  அதற்கு அருளுமாறு கேட்டுக்கொள்ள, ஈசனோ அது அவ்வளவு சுலபம் இல்லை எனவும், இங்கே இருந்து தெற்கே  ஜோதியே மலையாக மாறி இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்றும் அங்கே ஊசி முனையில் தவம் இருக்குமாறும் கூறி மறைந்தார்.

அதன்படியே திருவண்ணாமலைக்குப் பயணமானாள் அன்னை.  செல்லும் வழியில் அவளால் இயன்ற வரையில் சிவ வழிபாடு செய்து கொண்டே சென்றாள்.  அதற்கு நீரும் வேண்டுமே என நினைத்த அன்னைக்கு, அவள் குமாரன் ஆன சிவகுமாரன் ஓரிடத்தில் மலையைக் குடைந்து நதி ஒன்றைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தான்.  (இன்று சேயாறு என அழைக்கப் படும் ஆறு அதுவே என்கின்றனர்.)  அதே போல் கடும் தவம் செய்யும் அன்னைக்குக் குளிர்ச்சியாக இருக்க வேண்டி நதிக்கரையில் வாழைமரங்களால் ஆன பந்தல் ஒன்றையும் அமைத்தாராம் சிவகுமாரன். அன்னை அந்தச் சேயாற்றில் நீராடிவிட்டு வாழைப்பந்தலின் கீழ் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துக்கொன்டு பயணத்தைத் தொடர்ந்தாள்.  வாழைப்பந்தல் அமைந்த இடம் இன்றும் வாழைப்பந்தல் என்னும் பெயரிலேயே விளங்குகிறது.

இந்த வாழைப்பந்தலில் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துவிட்டுத் திருவண்ணாமலையை அடைந்தாள் தேவி.  தேவியின் வருகையை எதிர்நோக்கி அங்கே கெளதம மஹரிஷி, சதாநந்தர், பிருகு போன்றோர் காத்திருந்தனர்.   அம்பிகையை வரவேற்று அவள் தவத்திற்கான சகல ஏற்பாடுகளையும் மனமுவந்து செய்து கொடுத்தனர்.  காலின் ஒற்றை விரலால் அதாவது கட்டைவிரல் நுனியில் நின்று கொண்டு கடுந்தவம் செய்ய ஆரம்பித்தாள் அன்னை.  இந்தச் சமயம் தான் மஹிஷாசுரனின் அராஜகமும் அதிகம் ஆனது.  தேவி ஒருத்தியால் தான் அவனை அடக்க முடியும்.  ஆனால் தேவியோ கடுந்தவத்தில் இருக்கிறாளே! என்ன செய்வது எனப் புரியாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி முனிவர்களும் திருவண்ணாமலையில் தவமிருந்த மற்றவரிடம் முறையிட அவர்களும் தவமிருந்த அன்னையைப் பிரார்த்தித்தனர்.  தவத்தில் இருந்த அன்னைக்குப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தெரியவர, தன் தவ வலிமையால் துர்காபரமேஸ்வரியை உருவாக்கினாள் அன்னை.  மஹிஷனை அழிக்க அவளை அனுப்பி வைத்தாள்.  அன்னையின் அம்சமான துர்கா படை, பரிவாரங்களோடு சென்றாள்.

மஹிஷாசுரன் பல்வேறு வடிவங்களும் எடுத்து அன்னையைத் தடுமாற வைக்கத் திட்டம் போட்டான்.  அன்னையின் அம்சமான துர்கையோ சற்று நேரம் பொறுமை காத்தாள்.  பின்னர் அவன் உண்மை உருவான மஹிஷ உருவில் அவன் வரும்போது அந்த மஹிஷத்தின் தலையை வெட்டி வீழ்த்தினாள் துர்கை.  அப்போது அவன் கழுத்திலிருந்து ஒரு லிங்கம் கீழே விழுந்தது.  ஆஹா, இது என்ன??

மஹிஷாசுரன் மன்னத முனிவர் என்பவர் சிவபூஜை செய்கையில் அவரையும் அவர் வழிபட்ட சிவலிங்கத்தையும் ஒரே விழுங்கில் விழுங்க, சிவலிங்கம் அவன் கண்டத்திலேயே தங்கி விட்டது.  அந்த லிங்கம் தான் எருமைத் தலையை துர்கை வெட்டியதும் கீழே விழுந்ததாம்.  சிவலிங்கம் கீழே விழுந்துவிட்டால் அபசாரம் என நினைத்த துர்கை தன்னிரு கைகளால் அந்த லிங்கத்தை ஏந்தினாளாம். அவள் கையை விட்டு அந்த லிங்கம் அகலாமல் உள்ளங்கையிலேயே ஒட்டிக்கொண்டது.  பதறிய துர்கை அன்னையை நாடி ஓடினாள்.  அன்னை பார்த்துவிட்டுச் சிரித்தாள்.  சிவபக்தனான மஹிஷனைக் கொன்றதால் அவனைக் கொன்ற பாவத்தினால் உன் கைகளை விட்டு இந்த லிங்கம் அகலவில்லை.  உன் கையில் இருக்கும் கட்கம் என்னும் வாளால் தரையைக் கீறிக் கிளம்பும் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் உனக்குக் கையிலிருக்கும் லிங்கம் அகன்று பாவ விமோசனமும் கிடைக்கும் என்று சொல்ல அப்படியே தனது கட்கம் என்னும் வாளால் துர்கை கீற அங்கே ஓர் தீர்த்தம் தோன்றியது.  அதை இன்றும் கட்க தீர்த்தம் என்னும் பெயரிலேயே அழைக்கின்றனர்.   துர்கையின் கைகளில் இருந்த லிங்கமும் கீழே விழுந்தது.

அன்னை அதன் பிறகு ஈசனோடு இரண்டறக் கலந்து அர்த்த நாரீச்வரராக ஆனாள்.  ஆனால் அன்னை அடியெடுத்து வைத்த நாளில் இருந்து அந்தப் பிரதேசமே ஜோதி மயமாகவும், பசுமையாகவும் மாறியதால், மக்கள் அனைவரும் இந்த இடம் என்றும் இப்படியே ஜோதி வடிவாகவும், பசுமையாகவும் காட்சி அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள அன்னையும் அவ்விதமே ஆகட்டும் என அருளிச் செய்தாள்.  அன்னையை அவர்கள் அன்று முதல் பச்சையம்மனாக வழிபட்டனர்.  பயிர், பச்சையை வாழச் செய்தமையால் பச்சை வாழி அம்மன் எனவும் அழைக்கப் பட்டாள்.

இன்னொரு வரலாற்றில் வாழைப்பந்தலில்  பந்தலை அன்னையே அமைத்ததாகவும், மணலால் லிங்கம் பிடிக்க நீர் வேண்டி விநாயகனையும், குமரனையும் கேட்டதாயும், அவர்கள் வர நேரமானதால் அன்னையே நீரைத் தன் கைப்பிரம்பால் தட்டி உற்பத்தி செய்ததாகவும் பின்னர் விநாயகனும், முருகனும் கொண்டு வந்த நீரும் சேர்ந்து மூன்று நதிகளாக மாறியதாகவும் அதுதான் முக்கூட்டு என்னும் இடம் எனவும் கூறுகின்றனர்.  அப்போது அருகே இருந்த கதலிவனத்தில் அசுரன் ஒருவன் அன்னையின் தவத்துக்கும், வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் நோக்கில் வந்ததாயும் அவனை ஈசனும், விஷ்ணுவும் சேர்ந்து வாழ்முனி, செம்முனி என்னும் உருவில் வதம் செய்து அன்னைக்கு உதவியதாகவும் கூறுகிறது.  இவர்களோடு சேர்ந்து இன்னும் ஐவரும் அன்னைக்கு உதவியதாகவும் கூறுகின்றனர்.  அவர்கள் முறையே வாழ்முனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, வீர முனி, முத்து முனி, வேதமுனி ஆகியோர். செம்முனி கோபக்காரன் என்பதால் இவரைக் கட்டுப் படுத்தக் காலில் விலங்கு இருக்கும் என்கின்றனர்.  பச்சையம்மன் கோயில்களில் வெட்ட வெளியில் பிரம்மாண்டமாக இந்த ஏழு முனிவர்கள் சிலைகளையும் காணலாம். இவர்களைத் தவிர, கெளதமர் உள்ளிட்ட சப்தரிஷிகளின் உருவங்களும் சிறியதாய்ப் பின்னால் காணப்படும்.

பச்சையம்மன் கோயில்களில் கணபதிக்கும்,  முருகனுக்கும் இடம் உண்டு.  பச்சை நிற ஆடையிலேயே காட்சி அளிக்கும் பச்சையம்மனுக்கு உகந்த நாட்களாய்த் திங்கட்கிழமைகளே சொல்லப் படுகின்றன.  அம்மனுக்குப் படையலும் சைவப் படையல் தான்.  அம்மனுக்காக நேர்ந்து கொண்டு பெரிய யானை, குதிரைச் சிலைகள் வைக்கின்றனர்.  இரவில் குதிரையில் ஏறி அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம்.  ஆகவே குதிரைகள் அம்மன் குதிரை என்றே அழைக்கப் படுகின்றன. ஈசனும் இங்கே மன்னாதீஸ்வரர் என்ற பெயரில் தெற்குப் பார்த்து வீற்றிருப்பார்.  வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம் ஆவாள்.  எனினும் வாழைப்பந்தலில் முதல் முதல் அம்மன் குடிகொண்ட இடமே பச்சையம்மன் குடி கொண்ட முதல் இடமாகக் கருதப் படுகிறது.