Friday, January 12, 2018

பாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில்

Singanenjam Sambandam

பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை     யொட்டியுள்ள  பாளையம் எனும் கிராமத்திலும் இன்றும் நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது. பாளையத்தில் பசுமை  வயல்களுக்கும் புளியந்தோப்ப்புகளுக்கும் இடையே பச்சைவாழியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலை கன்னிக் கோயில் என்றும் அழைக்கிறார்கள். என் தங்கையின் குடும்பத்தாருக்கு.குல தெய்வம் இந்த பச்சையம்மன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தங்கை மகனுக்கு மொட்டையடிக்கும் நிகழ்ச்சியின் போது  போனதுதான். நேற்று தங்கையின் பேரனுக்கு மொட்டையடிக்கும் விழாவிற்கு போகும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லா பச்சைவாழியம்மன் திருக்கோயில்களிளும் இருப்பது போல் இங்கேயும் கருமுனி, கொடிமுனி, தவமுனி, விலாடமுனி, செம்முனி, முத்துமுனி , வாழ்முனி என ஏழு முனிகள் காவல் தெய்வங்களாக வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ஏழு முனிகளில் இளையமுனியாகிய  வாழுமுனி உருவத்தில் மிகப் பெரியவராகக் காணப்படுகிறார். அவரது வலது பாதத்தின் கீழே  ஒரு தலை காணப் படுகிறது.  ஒரு சில கன்னிக் கோயில்களில் வாழுமுனி ஐந்தாவதாக அமர்ந்திருப்பார். இங்கே முதலிலேயே இருக்கிறார். வழக்கமாகக் கன்னிக்கோயில்களில் குதிரை சிலை ஒன்று இருக்கும். தெற்கு பார்த்து நின்றிருக்கும். இங்கே குதிரை சிலை இல்லை.

பச்சயம்மனுக்கு இருபுறமும் காத்தாயி அம்மன் உள்ளிட்ட பல தெய்வங்கள் உள்ளன.  கோயிலுக்கு எதிரே வீரன் அமர்ந்து காவல் காக்கிறார்.

வழிபாடுகள் தமிழ் மொழியில்தான் நடைபெறுகின்றன. சுமார் ‘இருநூறு முன்னூறு ஆண்டுகளாக இருக்கும் கோயில்’ என்கிறார்கள் சரியாகத் தெரியவில்லை.




Friday, July 22, 2016

பூவாடைக்காரி

முனைவர்.சுபாஷிணி

தெய்வங்கள் மனிதர்களைப் படைத்தன என ஒரு சாரார் சொல்கின்றார்கள். மனிதர்கள் படைத்த தெய்வங்கள் பற்றி சில தகவல்கள் தரலாம் என நினைக்கின்றேன்..

1. பூவாடைக்காரி

தமிழகத்தின் கிராமப்புறப்பகுதிகள் பல கதைகளை உள்ளடக்கியவை. இப்படித்தான் தெய்வங்களும்! ஒரு கிராமத்தில் ஒரு கோயில் இருக்கும். அங்குச் சென்று கேட்டால் அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு பெயர் சொல்வார்கள். காரணத்தைத் தேடினால் அதன் பின்னணியில் ஒரு கதை இருப்பது தெரிய வரும்.
இப்படித்தான் அண்மையில் ஒரு நூலில் பூவாடைக்காரி என்ற பெண் சாமி உருவான கதையை வாசித்து அறிந்து கொண்டேன்.
தஞ்சையை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பாளையக்காரர்கள் ஆளும் வகையில் ஏற்பாடு இருந்தது. இந்தப் பாளையக்காரர்களின் படை வீரர்களில் பலர் குடிகாரர்களாகவும் பெண்பித்தர்களாகவும் இருந்திருக்கின்றனர். அப்படி தஞ்சையின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்த தரங்கம்பாடியில் பெண் குழந்தைகள் பூப்படைந்து விட்டால் அச்செய்தி இந்த வீரர்களுக்கு எட்டினால் அந்தப் பெண் பிள்ளைகளைக் கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவர்களைக் கொன்று விடுவதோ அல்லது டச்சு நாட்டு வணிகர்களுக்கு அடிமைகளாக விற்பதோ என்ற வகையிலான அவலம் நடந்திருக்கின்றது.
இத்தகைய கொடுமையிலிருந்து தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற பெற்றோர் சிலர் முடிவு செய்து செயல்படுத்தியிருக்கின்றனர். அதாவது அவர்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் பூப்படைந்து பெரியவளானால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு குழியைத் தோண்டி அக்குழிக்குள் எண்ணெய் விளக்கொன்றை வைத்து அதை ஏற்றி வைக்கும் படி அச்சிறுமியிடம் சொல்வார்களாம், குழந்தை உள்ளே சென்றதும் மண்ணைத் தள்ளி குழியை மூடி விடுவராம்.
பிறகு சில சடங்குகளைச் செய்து அங்கே பூ, பழம் சாம்பிராணி ஏற்றி, அச்சிறுமி இறந்த இடத்தைக் கோயிலாக அமைத்து தெய்வமாகச் அச்சிறுமியை வழிபட்டிருக்கின்றனர். பின்னர் நாள்தோறும் அங்கே மாலையில் விளக்கேற்றி அச்சிறுமி இறந்த நாளைப் பக்தி உணர்வுடன் ஆராவாரத்துடன் வழிபட்டு வந்துள்ளனர். பாளையக்காரர் பின்னர் வீட்டுச் சிறுமி பற்றி விசாரித்தால் அம்மை நோய் வந்து அவள் இறந்து போனாள் எனச் சொல்லி சமாளித்திருக்கின்றனர்.
இப்படிப் பெற்றோராலேயே கௌரவக் கொலை செய்யப்பட்ட சிறுமிகளைப் பூவாடைக்காரி எனப் பெயரிட்டு வணங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது.
சிறுமியர் இப்படி கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் என்று அறியும் போது மனம் பதைபதைக்கின்றது. கொடிய பாளையக்காரர்கள், அவர்தம் அதிகாரிகளிடமிருந்து தம் வீட்டுக் குழந்தைகள் தப்பித்து வாழ முடியாது என எண்ணும் பெற்றோர் தாமே தம் குழந்தைகளை இப்படிக் கொன்று சாமிகளாக ஆக்கியிருக்கின்றனர்.
பூவாடைக்காரி பிறந்த கதை இது. இன்னும் எத்தனை எத்தனை சாமிகள் மனிதர்கள் கொடுமைகளினாலும் இயலாமைகளினாலும் உருவாக்கப்பட்டார்கள் எனத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறேன்.

நூல் குறிப்பு: தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி- ஆ.சிவசுப்பிரமணியன்.
அன்புடன்
சுபா
குறிப்பு - தரங்கம்பாடி பகுதி பற்றி அறிந்தோர் இந்த சாமி பற்றி மேலதிக தகவல் அறிந்தால் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்

Wednesday, July 1, 2015

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன், நாட்டரசன் கோட்டை..

Image courtesy: Google Images
'கண் கொடுக்கும் தெய்வம்' என பக்தர்கள் கொண்டாடும், அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மனின் திருக்கோயில், சிவகங்கையிலிருந்து ஆறு கிலோ  மீட்டரில் அமைந்திருக்கிறது..காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோயில், சிவகங்கையிலிருந்து இங்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன.

பெயர்க் காரணம்:

ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

'பூணுமெழிற் காளி எதிர் பொருந்தவர் மெய் கண்ணில் காணவர முற்றமையால் கண்ணுடையாள்' என்கிறது காளையார்கோயில் புராணம்.

கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், 'நேத்ராம்பிகா' என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், 'கண்ணாத்தாள்' என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.

ஆலய அமைப்பு:

சுயம்பு மூர்த்தியான அம்பிகையின் அருட்கடாட்சம் போல், விரிந்து பரவியிருக்கிறது திருக்கோயில்..திருக்கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உள்ளடக்கியது. திருக்கோயிலின் முன்பாக திருக்குளம்..சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடியதாக இருக்கிறது தேவியின் திருக்குளம். இது, சதுர அமைப்புடன், தூண்கள் உடையதாக விளங்குகிற சொக்கட்டான் மண்டபத்துக்கு வடபாகத்தில் அமைந்துள்ளது. இதுவே இத்திருக்கோயிலின் தீர்த்தம்.. குடிநீராகப் பயன்படுத்துவதால் தற்போது வேறு பயன்பாடுகள் இல்லை.. சிறிது காலம் முன்பு வரை நீராடுதல் அனுமதிக்கப்பட்டிருந்தது..

Image courtesy: Google Images
அன்னையின் அருட்சக்தி,  இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக‌
ஐதீகம்.. கண் நோய்கள் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில்  விட்டு கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை..குளத்தின் அருகில், கோயிலுக்கு முன்பாக, சிறிய அளவில், சித்தி விநாயகர் திருக்கோயில். இதை வழிபட்ட பின்பே, கோயிலுக்குள் செல்லும் மரபிருக்கிறது.

கோயிலில் நாம் முதலில் நுழைவது, பெரிய தூண்களை உள்ளடக்கிய சொக்கட்டான் மண்டபத்திலேயே......சொக்கட்டான் மண்டபம்,  பெரிய அளவிலானது. ஒரு படையே இதன் நிழலில் தங்கலாம். அவ்வளவு பெரியது. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள்.. ஒரு பக்கமாக, சரும நோய்கள் தீர, அன்னைக்கு உப்பு, மிளகு வாங்கிப் போடுவதாகப் பிரார்த்தனை செய்தவர்கள், அதைச் சேர்க்கும் மரப் பெட்டி இருக்கிறது.  கண் நோய்கள் வந்தவர்கள், இந்த மண்டபத்தில் 48 நாட்கள் தங்கி, குளத்தில் நீராடி, அன்னையை வழிபட்டால், கண் நோய்கள் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.. முற்காலத்தில், இதனை பலர் செய்து பயனடைந்தனர் என்கிறார்கள்.

அதனை அடுத்து, பக்தர்கள் நின்று வழிபடும் மகா மண்டபம்.. மிகப் பிரம்மாண்டமான துவார பாலகிகள் (பூத கணங்கள்)!.. அவர்களிடம் அனுமதி பெற்று, உள்ளே சென்றால், அர்த்த மண்டபம் (இடை நாழி). முதற் பூஜை கொண்டருளும் அனுக்ஞை விநாயகர், அருகில் உற்சவர் திருமேனிகள், அம்மனின் உற்சவத் திருமேனியான 'களியாட்டக் கண்ணாத்தாள்' ஆகியோர் அருளுகின்றனர். கருவறையில், அன்னை ஸ்ரீகண்ணுடைய நாயகியின் அற்புத தரிசனம்... அன்னையின் திருக்கோலம் அமர்ந்த நிலை.. உத்குடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள் அம்மன்.. பொதுவாக, கிராம தேவதைகள், இந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தால், மிகுந்த நியமங்களுடன் கூடிய வழிபாட்டு முறைகள் அவசியம்.. அன்னையின் வலது பாதம் பீடத்தின் மேல் ஊன்றிய நிலையில் இருக்க, இடது திருவடி, கீழே சண்டாசுரனின் தலை மேல் இருக்கிறது.

அன்னையின் பீடம், விஜயா பீடம்.. அன்னையின் திருவடிவம், மகாகாளியின் திருவடிவங்களில் ஒன்றான‌ 'நிசும்ப மர்த்தினி' வடிவம். எட்டுத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள் அம்பிகை...பின் ஆறு திருக்கரங்களில் முறையே, கிளி, பாசம், வாள், உடுக்கை, கேடயம், மணி முதலியவற்றை ஏந்தி, உயர்த்திய வலது மேற்கரத்தில் சூலம் தாங்கி, இடது கீழ்க்கரத்தில் பான பாத்திரமும் தாங்கிய திருக்கோலம்.. சூலம், சண்டனின் மார்பு நோக்கி அமைந்திருக்கிறது..கரங்களில் வளையல்களும், திருமார்பில் முத்தாரமும், திருத்தாலியும் அணிந்து, 'ஜ்வாலா கேசம்' என்னும் கதிர் மகுட தாரிணியாக, அருள் பொங்கும் திருவிழிகளுடன், சற்றே அழகுற தலைசாய்த்து,  அருட்காட்சி அளிக்கிறாள் அம்பிகை...

சண்டாசுர வதம் செய்த திருக்கோலம் என்றாலும், அம்பிகை, ஞானம் அருளும் சகல கலா வல்லி.. அம்மனின் திருக்கரங்களுள் ஒன்றில் இருக்கும் கிளி, ஞானத்தையும், மற்றொன்றில் இருக்கும் வாள், கூர்ந்த, உண்மைப் பொருளை உணர்ந்த புத்தியையும் குறிப்பதாக ஐதீகம்.. சித்தர்களில் ஒருவரான அழுகுணிச் சித்தர், ஞான ஸ்வரூபிணியாகிய அம்பிகையால் அருளப் பெற்று, இத்திருத்தலத்தில் சித்தியடைந்திருக்கிறார்.

அபிஷேக நீர் விழும் தீர்த்தத் தொட்டியின் அடியில் அவர் அடங்கியிருப்பதாக தல புராணம் கூறுகிறது. ஆனால், அம்மையின் பீடத்தின் கீழ் இருக்கும் (அக்கால) சுரங்க அறையிலேயே அவர் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது என்கிறார்கள்.. கருவறையை அடுத்த மண்டபத்தின் தரையில், சற்றுத் தூக்கிய ஒரு சதுரக் கல்லை சுட்டிக் காட்டி, முற்காலத்தில் அதுவே சுரங்கப் பாதையின் வாசல் என்றார் திருக்கோயில் பூசகர்.

கிராம தேவதைகள் சிரத்தில் பெரும்பாலும் கதிர் (அக்னி)மகுடம் காணப்படுவதன் வழக்கம், தீமைகளை அழிப்பதோடு அல்லாமல், மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்கும் சக்தி என்பதன் அடையாளம் என்று சொல்கிறார்கள்...

அன்னையின் எதிரே பெண் வடிவு கொண்ட வேதாளம்.. அம்மனின் திருநாமங்களுள் ஒன்றாக, ஆதி வேதாள நாயகி என்ற திருநாமமும் சொல்லப்படுகிறது. அம்மனின் கொடி, வேதாளக் கொடி.

மகா மண்டபத்தில், கொடி மரமும் அமைந்திருப்பதால், அதைக் கம்பத்தடி மண்டபம் என்றும் சொல்கிறார்கள்.. மண்டபத்தின் வடபுறம், வீரபத்திர சுவாமியும், சிறு வடிவில் காளியும் கோயில் கொண்டருளுகின்றனர்.  கீழ்ப் பகுதியில், பைரவர் கோயில் கொண்டருளுகிறார். உள்பத்தி பிரகாரம் ஒன்றும், வெளிச்சுற்று பிரகாரம் ஒன்றும் அமைந்திருக்கிறது..  உள்பத்தியின் கன்னி மூலையில், அபிஷேக விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது.. கருவறை விமானம், இரண்டு தள (துவி தள) விமானம், மூன்று ஸ்தூபிகளைக் கொண்டுள்ளது. பிரகாரம் சுற்றி வருகையில், அபிஷேக நீர்த் தொட்டியைக் கண்டு வணங்கலாம்..

தல புராணம்:

இவ்வூருக்கு தெற்கே அமைந்திருக்கும் கிராமம் பிரண்டகுளம். இதன் வழியாக, ஒரு யாதவன், பால் எடுத்து வரும் போது, நாட்டரசன் கோட்டைக்கு அருகில் வருகையில் ஒரு கல் இடறியதால், பால் குடம் தவறி, பால் முழுவதும் கழனியில் கலந்தது. ஒரு நாள், இரு நாள் அல்ல, பல நாட்கள் இது தொடர்ந்தது. அவனுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் இது நடந்தது.. இது பற்றி சிந்தித்த யாதவர்கள், ஒரு நாள், பால் குடம் கொண்டு  வரும் போது, நினைவாக‌, அந்தக் குறிப்பிட்ட கல் இடறும் முன்பே, மண்வெட்டி கொண்டு அந்த இடத்தை வெட்டினர். பீறிட்டடித்தது குருதி வெள்ளம்!.. அந்த இடம் முழுவதும் செந்நிறக் காடாகியது!.. யாதவர்கள், இது தெய்வ சக்தியின் இருப்பிடம் என்பதை உணர்ந்தனர். அம்பலக்காரரான மலையரசன் என்பவர், செய்தியறிந்து, அந்த இடத்திலிருந்து கல்லை, முழுவதுமாக வெளியே எடுக்க வைத்தார்.

வெளிப்பட்டது கல்லல்ல.. கல் உருவில், கருணை உருவான அம்மன், கண்ணுடையாளாக வெளிப்பட்டாள்.. (இவ்வாறு, கல் இடறும்படி செய்து, தன்னைக் கண்ணுற வைத்ததாலும் அம்மன் 'கண்ணுடையாள்' ஆனாள் என்றும் ஒரு பெயர்க் காரணம் கூறுகின்றார்கள்.) அந்த நேரத்தில் ஒருவருக்கு அருளாவேசம் வந்து, அவர் மூலமாக 'நான் கண் கொடுக்கும் தெய்வமாக இருப்பேன்!' என்று அம்மன் வாக்களித்தாள்.. இன்றளவும் அவ்வண்ணமே, பக்தர்களின் விழிமலர்களைக் காத்து வருகிறாள் கண்ணாத்தாள்..

அங்கிருந்து எடுத்து வரப்பட்டு, அன்னை முதலில் சிவன் கோயிலிலேயே வைக்கப்பட்டாள். மறு நாள் அன்னை, வடக்கு நோக்கித் திரும்பியிருக்கக் கண்டு, இதுவே அவள் திருவுளம் என்று, தனிக் கோயிலில் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்கள்..

திருவிழாக்கள்:

வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது... வைகாசி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றமும், சுவாதி நட்சத்திரம் சேர்ந்த தினத்தில், அந்தி வேளையில், களியாட்டக் கண்ணாத்தாள் எழுந்தருளிய வெள்ளி ரத பவனியும் நடைபெறுகிறது. மறு நாள் விசாகத்தன்று தேர் பவனியும் நடைபெறுகிறது..

ஆடி மாதம், முளைக்கொட்டு உற்சவமும், புரட்டாசி மாதம், நவராத்திரி உற்சவமும் (ஒன்பது தினங்கள்), ஐப்பசி மாதம், ஒன்பது தினங்களுக்கு கோலாட்டத் திருநாளும், திருக்கார்த்திகை தினத்தன்று தீபத் திருவிழாவும், தை மாதம் ஒன்பது தினங்களுக்கு தைலக் காப்பு உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தை மாதம் செவ்வாய் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தை மாதம் முதல் செவ்வாய் அன்று, சன்னதி வீதியில், எவ்வித வேறுபாடும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடி, வரிசையாக பானைகள் வைத்து பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். ஒரு வேளை, தை மாதப் பிறப்பு, செவ்வாய் கிழமை வந்தால், அடுத்த செவ்வாயன்று இவ்வழிபாடு செய்யப்படுகின்றது.

இவை வருடாந்தர உற்சவங்கள். இவை தவிர, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 'களியாட்டத் திருவிழா' மிகச் சிறப்பானதாகும்.. முதன் முதலில், பூமியிலிருந்து எடுக்கப்பட்டவுடனேயே, அன்னையின் திருவடிவை நகர்த்த முடியாமல் போக, ஒரு பக்தரின் அருள்வாக்கில், அன்னை இவ்விழாவைக் கொண்டாடும்படி பணித்து, அதன் பின்னரே, தன்னை அங்கிருந்து நகர்த்த முடியும் எனச் சொன்னதாகவும் அதன் படி, இது செய்யப்படுவதாகவும் தல புராணம் சொல்கிறது. மிக விரிவான நியமங்களை உள்ளடக்கிய இந்த விழாவின் போது, அன்னையின் மறக் கருணை வெளிப்படும் வகையில், அசுர கணங்களை வேட்டையாடும் பாவனையில் பலிகள் கொடுக்கப்படுகின்றன. கடைசியாக , இந்தத் திருவிழா, சென்ற 1995ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழா,  இப்பகுதியில், இந்த அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் திருவிழாவாகும்..

கோயிலின் பூஜைகள், பாரசைவர்களால் செய்யப்படுகின்றது. அம்மனுக்கு கண் மலர்கள் வாங்கி, சமர்ப்பித்தல் மிகச் சிறப்பான வேண்டுதல்.

நாட்டரசன் கோட்டையில், பாட்டரசனாகிய கம்பரின் சமாதிக் கோயிலும் அமைந்துள்ளது.. தன் வாழ்நாள் இறுதியில், இவ்வூர் வந்த கம்பர், இவ்வூர் எல்லையில், மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம், 'சோறு எங்கு விற்கும்?' எனக் கேட்க, 'சோறு தொண்டையில் விக்கும்!' என்று அவர்கள் பதில் கொடுத்தார்கள்.. ஞானேஸ்வரியான அம்பிகையின் அருளால், ஊர் மக்கள் அனைவரின் அறிவும் சுடர் விடுவதை உணர்ந்த கம்பர்,

'காட்டெருமை மேய்க்கின்ற காளையர்க்கு நான் தோற்றேன்- இனி இந்

நாட்டரசன் கோட்டை நமக்கு'

என்று, இவ்வூரிலேயே தம் இறுதி நாளைக் கழித்தார்.

அவர் அம்பிகை உபாசகராதலால், அவருக்கு இவ்வூரில் சமாதி கோயில் அமைந்துள்ளது. இந்த சமாதியின்  மண்ணை, குழந்தைகளுக்கு கரைத்துப் புகட்டினால், அன்னையின் அருளால், குழந்தைகள், கல்வி, கேள்விகளில் வல்லவராவர் என்பது ஐதீகம்.

அன்னையின் அருளாடல்கள் ஆயிரம் ஆயிரம்!.. மானிடர்களுக்கு மட்டுமின்றி, தன் கோயிலில் தஞ்சமடைந்த, கண்பார்வைக் குறைபாடுற்ற ஒரு யானைக்கும் அன்னை கண் பார்வை நல்கியிருக்கிறாள். கோயில் கோபுரக் கலசங்களை திருடிச் சென்றவர்கள், இவ்வூர் எல்லை தாண்டு முன்பாக, கண் பார்வை இழந்தனர். இவ்வாறு பலப் பல லீலைகளை பரவசத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள்..

அம்மனின் பெருமை சொல்லும் பாடல்களில் முதன்மை பெறுவது, அழுகுணிச் சித்தரின் பாடல்கள்.. அவற்றில், சித்தர்  'கண்ணம்மா' என்று விளிப்பது, இந்த அருள் நங்கையையே என்கிறார்கள்..

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ!

என்ற இந்தப் பாடல், அன்னையின் திருவுருவைக் குறிப்பதாகவே சொல்கிறார்கள்..

முத்துக் குட்டிப் புலவர் இயற்றிய, 'ஸ்ரீகண்ணுடையம்மன் பள்ளு' மிகச் சிறந்த சிற்றிலக்கியம்!..

ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில், காலை 7.15 மணி முதல், பிற்பகல் ஒரு மணி வரையும், மாலை 4.15 முதல், இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்..

Friday, June 26, 2015

அருள்மிகு வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயில், கண்டமங்கலம்...

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
தஞ்சையில், குடமுருட்டி ஆற்றை ஒட்டிய ஊரே கண்டமங்கலம். திருக்காட்டுப்பள்ளியின் அருகில் அமைந்திருக்கிறது. இது.. வளமான இந்த ஊரின் வளமைக்கும் வாழ்வுக்கும் காரணமாக, அவ்வூர் மக்கள், ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மனின் அருளையே குறிப்பிடுகின்றனர்.

அம்மன், இவ்வூரில் எழுந்தருளிய வரலாறு மிக அதிசயமானது. அதை அறியும் முன்பாக,  திருக்கோயில் அமைப்பை ஒரு முறை பார்த்து விடலாம்!.. திருக்கோயில், எளிமையான சுற்றுச் சுவருடன் கூடியதாக அமைந்திருக்கிறது. உயரமான முன் மண்டபத்தில், ஸ்ரீ வாராஹி தேவி அருளுகின்றாள். அங்கு, ஸ்ரீ கணபதியையும், ஸ்ரீபாலசுப்பிரமணியரையும் தரிசிக்கலாம். அதை அடுத்து, அன்னை அருளாட்சி செய்யும் கருவறை..

நான்கு திருக்கரங்களுடன், இடது திருக்காலை மடித்து, வலது திருவடி கீழிருக்குமாறு அமர்ந்த திருக்கோலத்தில் அருளுகிறாள் அம்பிகை.. பெரும்பாலான கிராம தேவதைகள் அமர்ந்திருக்கும் இந்த நிலையினை, 'சுகாசனம்' என்பது வழக்கம். அம்மன், தன் நான்கு திருக்கரங்களில்  முறையே சூலம்,  அங்குசம், பாசம், அன்னக்கிண்ணம் முதலியவற்றைத் தாங்கி அருளுகின்றாள்.

கோயிலின் திருச்சுற்றில், ஸ்தல விருட்சமான வேப்ப மரம். மிக அதிசயமானதொரு வேப்ப‌ மரம் இது.. இதில் ஆங்காங்கே முண்டும் முடிச்சுமாக இருக்கிறது. அவற்றில், ஒன்றிரண்டிலிருந்து, பளபளவென எதுவோ தெரிகிறது. இதைப் பற்றிய விவரம் அதிசயமானது!.. இத்திருக்கோயிலில் வேண்டுதல் செய்பவர்கள், அது நிறைவேறியதும், மணிகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கமிருக்கிறது. ஸ்தல விருட்சத்தில் அடிக்கப்பட்ட மணியை, காலப்போக்கில் மரமே மெல்ல உள்வாங்கி, தன்னுள் மறைத்துக் கொள்கிறது என்கிறார்கள். மரத்தை நெருங்கிப் பார்த்தால், இது உண்மை என்றே புலனாகிறது. பெரும்பாலான மணிகளின் கீழ்ப்புறம் மரத்துக்கு வெளியேயும், மேற்புறம் மரத்துக்குள் மறைந்தும் இருக்கிறது!!!!.  

சுற்றுச் சுவரை ஒட்டிய சிறு சந்நிதிகளில் அம்மனின் பரிவார தேவதைகளான மதுரை வீரன், முத்து வழியான், மாமுண்டிக் கருப்பு, முத்தாளு இராவுத்தர் ஆகியோர் அருளுகிறார்கள்..

பரிவார தெய்வங்களில், ஒரு தெய்வத்தின் பெயர் சற்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றலாம். பல்லாண்டுகள் முன்பு வாழ்ந்தவரே முத்தாளு இராவுத்தர். ஒரு முறை, அவர் செருப்பணிந்து, குதிரை மேல் ஏறிக் கொண்டு, திருக்கோயிலில் நுழைய முயன்றார். திருக்கோயில் பணியாளர்களின் எச்சரிக்கையையும் மீறி, அவர்  உள் நுழைய முயன்ற போது, எதிர்பாரா விதமாக, குதிரை மிரண்டது. முத்தாளு இராவுத்தர், நிலை குலைந்து விழுந்தார். விழுந்த வேகத்தில், அவருக்கு பலமான அடிபட்டது. உயிர் விடும் தருவாயில், எங்கும் நிறை சக்தியின் மகத்துவம் புரிந்து பணிந்தார். அம்மன் அருள் புரிந்து அவரை, தன் பரிவார தேவதைகளில் ஒருவராக ஏற்றாள்.

அவருக்கு திருக்கோயிலினுள் தனி சந்நிதி அமைத்து வழிபாடு துவங்கியது. திருவிழாவில், அம்மன் முன்பாகச் செல்லும் பரிவாரங்களில் ஒருவராகவும் இடம் பெறுகிறார் அவர்.

அம்மனுக்கென தனிக்கோயில் இருந்த போதிலும், அம்மனின் உற்சவ மூர்த்தி, அவ்வூரிலேயே இருக்கும் கைலாசநாதர் திருக்கோயிலிலேயே இருக்கிறது. வருடத்துக்கு பத்து நாட்கள் மட்டுமே, அன்னையின் உற்சவ மூர்த்தி, வாத்தலை நாச்சியம்மனின் திருக்கோயிலில் இருக்கும். மற்ற நாட்களில் கைலாசநாதர் திருக்கோயில் மட்டுமே உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம். உற்சவரின் திருமுடி (கிரீடம்) பின்புறம், சக்திச் சக்கரம் எழுதப்பட்டுள்ளதை சிறப்பாகக் கூறுகின்றார்கள்.

ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மன், கோயில் கொண்டருளிய வரலாறு:

இவ்வூரில், ஒரு முறை பெருமழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்ததும், வெள்ளத்தில் கரை ஒதுங்கியது ஒரு சிற்பம்.. அம்மனின் திருவுருவமே அது!.. வெகு காலமாக, கிராமத்துக்கென காவல் தெய்வமில்லையே என்று வருந்தியிருந்த அவ்வூர் மக்களின் ஏக்கம் போக்கவே, தன்னை இவ்வாறு வெளிப்படுத்தினாள் அம்மன் என்று சொல்கிறார்கள்.

கண்டெடுக்கப்பட்ட அந்த அம்மனை, தங்கள் காவல் தெய்வமாக ஏற்றார்கள் கண்டமங்கலம் ஊரினர்.. ஊரில் முன்பு வாராஹியை வழிபட்டு வந்த இடத்திலேயே, இந்த அம்மனுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. முதலில் திரிசூலி என்றும் லோகேஸ்வரி என்றும் வழிபடப்பட்டாலும், அன்னைக்கு 'வாத்தலை நாச்சியம்மன்' என்ற திருநாமமே நிலைத்தது. இந்த  திருநாமம் ஏற்பட்ட வரலாறு தெரியவில்லை.

விமரிசையாக நித்ய பூஜைகளையும், வருடத்திற்கொரு முறை, காப்பு கட்டி திருவிழாவும் கொண்டாடி வந்த மக்கள், காலப் போக்கில் விழா எடுக்க மறந்தார்கள். விழா எடுப்பது, பல்வேறு ஆகம காரணங்களை உள்ளடக்கியது. ஊரின் நன்மையே அதில் அடங்கியுள்ளது. அதை அறியாமல், விழா எடுக்க மறந்த‌ தன் மக்கள் செய்த தவறை அவர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்பினாள் அன்னை.  தல விருட்சமாயிருந்த வேப்பமரம் பட்டுப் போகத் துவங்கியது. ஊரில் ஆங்காங்கே நெருப்பு பற்றத் துவங்கியது.  அப்போதும், தம் தவறை உணராத‌  மக்களின் முன்பாக, தன் அருளாடலை வெளிப்படுத்தினாள் அம்மன்.

ஒரு நாள், திருக்கோயிலின் உள்ளே, பூசாரியின் ஆராதனைத் தட்டு, காரணம் ஏதுமின்றி பறந்து விழுந்தது.. வழிபட வந்திருந்த பெண்ணொருத்தியினுள்ளே அருட்சக்தியாகப் புகுந்து, விழா எடுக்காததன் விளைவுகளை சுட்டிக் காட்டினாள் அன்னை. .. மக்களின் அறியாமை அகன்றது. விழா எடுப்பதாக, அம்மனின் திருமுன்பு உறுதி கூறினர். அவ்வாறு செய்தால், எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர்க்கும் என்று அருள் வாக்களித்தாள் அம்மன். விழாவுக்குக் காப்பு கட்டியதும், கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் செய்தருளினாள். எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர் விட்டது!!!!...

திருவிழா!..

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, அம்மனின் திருவிழா, வருடத்திற்கொரு முறை, பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது.  பங்குனி மாதம், முதல் செவ்வாய், அம்மனுக்குக் காப்புக் கட்டுகிறார்கள். இரண்டாவது செவ்வாய் தொடங்கி, பத்து நாட்கள் விழா நடைபெறுகிறது.  அன்னையின் உற்சவ மூர்த்தி, கைலாசநாதர் திருக்கோயிலில் இருந்து எடுத்து வரப்படுகிறது. விழா  நடைபெறும் பத்து நாட்களும், வாத்தலை நாச்சியம்மன் கோயிலிலேயே உறசவ மூர்த்தியை வைத்து வழிபடுகிறார்கள்....

ஒன்பதாம் நாள் 'எல்லைச் சுற்று' என்னும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெறும். அன்று, அம்பிகை, தன் பரிவார தெய்வங்களுடன், தன் காவல் எல்லைகளைத் தொட்டு, சுற்றி வருகிறாள்.

அந்த சமயத்தில், உற்சவ மூர்த்தியின் திருநெற்றியில் துடைக்கத் துடைக்க வியர்வை பொங்குவது பேரதிசயமான ஒரு நிகழ்வாகும். இதைப் பார்க்கவென்றே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்!.

பத்து நாட்கள் உற்சவம் முடிந்து, காப்பு கழட்டப்பட்டதும், உற்சவமூர்த்தி, மீண்டும் கைலாசநாதர் கோயிலுக்குக் கொண்டு வரப்படும். அப்போது அம்மன், மிகுந்த உக்ரமாகக் காணப்படுவதாக ஐதீகம். ஆகவே, உற்சவரை, வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயிலில் இருந்து, கைலாசநாதர் திருக்கோயிலுக்கு எடுத்து வரும் போது, எதிரே எந்தப் பெண்ணும் வரக் கூடாது என்று கட்டுப்பாடு...

உற்சவ மூர்த்திக்கு வெள்ளை உடுத்தி, தப்படித்தவாறே வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயிலில் இருந்து, கைலாசநாதர் திருக்கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அந்த ஒலி கேட்டதும், ஊர்ப் பெண்கள் தத்தம் வீடுகளுக்குள்ளே சென்று விடுவர். கைலாசநாதர் திருக்கோயில் வந்ததும், அங்கு ஊர்ப்பெண்கள், அம்மனுக்கு முன்பு, உக்ரத்தை தணிக்கும் விதமாக மாவிளக்கு வழிபாடு செய்கிறார்கள்.

இத்தனை சிறப்பு மிக்க, ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மனை தரிசிக்க வேண்டி கண்டமங்கலம் செல்ல வேண்டுமானால், தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியே திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியாக‌ செல்லலாம். இந்தத் திருக்கோயில், கண்டியூர், தோகூர் நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இவ்வூர் வந்து செல்ல, பேருந்துகள், ஆட்டோ முதலான வாகன வசதிகள் யாவும் நல்ல முறையில் அமைந்திருக்கின்றன.

Tuesday, May 5, 2015

பச்சை வாழி அம்மன் வரலாறு!


கீதா சாம்பசிவம்

 இவள் அன்னையின் அம்சமே ஆவாள்.

திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம்.  ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”,  என வினவினாள் அன்னை.  அனைத்தும் அறிந்தவளுக்கு அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாத ஒன்றா? புரியாத ஒன்றா?  இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல் செய்ய எண்ணி இருப்பதைப் புரிந்து கொண்டார் ஐயன்.  “ஆம் இருவரும் என் கண்களே”  என்றார்.  உடனே அன்னை தன்னிரு தளிர்க்கைகளாலும் ஐயனின் கண்களைப் பொத்த அன்டசராசரங்களிலும் காரிருள் சூழ்ந்தது.  அத்தனை ஜீவராசிகளும் திடீரென ஏற்பட்ட இந்தக் காரிருளைக் கண்டு நடுங்கித் தவித்தன.  தேவாதிதேவர்கள் மஹாபிரளயமோ என அலறிக்கொண்டு ஈசனிடம் ஓடி வந்தனர்.  வந்ததும் தான் புரிந்தது அன்னையின் விளையாட்டு என்பது.  அதற்குள் ஐயன் தன் நெற்றிக்கண்ணைச் சிறிதே திறக்க அனைத்து உலகும் ஒளியால் மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்தது.




தன் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டால் நடுங்கிப் போன அண்டசராசரத்து மக்களையும் நினைத்து வருந்திய அன்னையவள், தான் மாபெரும் பாவம் செய்துவிட்டதை உணர்ந்தாள். ஐயனை விட்டுப் பிரிந்து சென்று கடும் தவம் செய்து இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள விரும்பினாள்.  ஐயனிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அன்னையின் நோக்கம் புரிந்த ஈசனும் காஞ்சிமாநகரில் கம்பா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்லிக் கட்டளை இட்டார்.  ஐயனின் கட்டளையைச் சிரமேற்றாங்கி அன்னையவளும் கம்பாநதிக்கரையில் சுற்றிலும் அக்னியை வளர்த்து பஞ்சாக்னிக்கும் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள்.  அவள் கடுந்தவத்தைப் பார்த்த ஈசன் சற்றே சோதிக்க எண்ணிக் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார்.  வெள்ளம் தான் பிரதிஷ்டை செய்திருக்கும் லிங்கத் திருமேனியை அடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது எனக் கலங்கிய அன்னை தன்னிரு கைகளாலும் லிங்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.  அப்போது ரிஷபவாஹனராய்க் காட்சி தந்தார் ஈசன்.  அன்னை அவரை வணங்கி அவரில் தான் பாதியாக விரும்புவதைக் கூறினாள்.  அதற்கு அருளுமாறு கேட்டுக்கொள்ள, ஈசனோ அது அவ்வளவு சுலபம் இல்லை எனவும், இங்கே இருந்து தெற்கே  ஜோதியே மலையாக மாறி இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்றும் அங்கே ஊசி முனையில் தவம் இருக்குமாறும் கூறி மறைந்தார்.

அதன்படியே திருவண்ணாமலைக்குப் பயணமானாள் அன்னை.  செல்லும் வழியில் அவளால் இயன்ற வரையில் சிவ வழிபாடு செய்து கொண்டே சென்றாள்.  அதற்கு நீரும் வேண்டுமே என நினைத்த அன்னைக்கு, அவள் குமாரன் ஆன சிவகுமாரன் ஓரிடத்தில் மலையைக் குடைந்து நதி ஒன்றைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தான்.  (இன்று சேயாறு என அழைக்கப் படும் ஆறு அதுவே என்கின்றனர்.)  அதே போல் கடும் தவம் செய்யும் அன்னைக்குக் குளிர்ச்சியாக இருக்க வேண்டி நதிக்கரையில் வாழைமரங்களால் ஆன பந்தல் ஒன்றையும் அமைத்தாராம் சிவகுமாரன். அன்னை அந்தச் சேயாற்றில் நீராடிவிட்டு வாழைப்பந்தலின் கீழ் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துக்கொன்டு பயணத்தைத் தொடர்ந்தாள்.  வாழைப்பந்தல் அமைந்த இடம் இன்றும் வாழைப்பந்தல் என்னும் பெயரிலேயே விளங்குகிறது.

இந்த வாழைப்பந்தலில் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துவிட்டுத் திருவண்ணாமலையை அடைந்தாள் தேவி.  தேவியின் வருகையை எதிர்நோக்கி அங்கே கெளதம மஹரிஷி, சதாநந்தர், பிருகு போன்றோர் காத்திருந்தனர்.   அம்பிகையை வரவேற்று அவள் தவத்திற்கான சகல ஏற்பாடுகளையும் மனமுவந்து செய்து கொடுத்தனர்.  காலின் ஒற்றை விரலால் அதாவது கட்டைவிரல் நுனியில் நின்று கொண்டு கடுந்தவம் செய்ய ஆரம்பித்தாள் அன்னை.  இந்தச் சமயம் தான் மஹிஷாசுரனின் அராஜகமும் அதிகம் ஆனது.  தேவி ஒருத்தியால் தான் அவனை அடக்க முடியும்.  ஆனால் தேவியோ கடுந்தவத்தில் இருக்கிறாளே! என்ன செய்வது எனப் புரியாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி முனிவர்களும் திருவண்ணாமலையில் தவமிருந்த மற்றவரிடம் முறையிட அவர்களும் தவமிருந்த அன்னையைப் பிரார்த்தித்தனர்.  தவத்தில் இருந்த அன்னைக்குப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தெரியவர, தன் தவ வலிமையால் துர்காபரமேஸ்வரியை உருவாக்கினாள் அன்னை.  மஹிஷனை அழிக்க அவளை அனுப்பி வைத்தாள்.  அன்னையின் அம்சமான துர்கா படை, பரிவாரங்களோடு சென்றாள்.

மஹிஷாசுரன் பல்வேறு வடிவங்களும் எடுத்து அன்னையைத் தடுமாற வைக்கத் திட்டம் போட்டான்.  அன்னையின் அம்சமான துர்கையோ சற்று நேரம் பொறுமை காத்தாள்.  பின்னர் அவன் உண்மை உருவான மஹிஷ உருவில் அவன் வரும்போது அந்த மஹிஷத்தின் தலையை வெட்டி வீழ்த்தினாள் துர்கை.  அப்போது அவன் கழுத்திலிருந்து ஒரு லிங்கம் கீழே விழுந்தது.  ஆஹா, இது என்ன??

மஹிஷாசுரன் மன்னத முனிவர் என்பவர் சிவபூஜை செய்கையில் அவரையும் அவர் வழிபட்ட சிவலிங்கத்தையும் ஒரே விழுங்கில் விழுங்க, சிவலிங்கம் அவன் கண்டத்திலேயே தங்கி விட்டது.  அந்த லிங்கம் தான் எருமைத் தலையை துர்கை வெட்டியதும் கீழே விழுந்ததாம்.  சிவலிங்கம் கீழே விழுந்துவிட்டால் அபசாரம் என நினைத்த துர்கை தன்னிரு கைகளால் அந்த லிங்கத்தை ஏந்தினாளாம். அவள் கையை விட்டு அந்த லிங்கம் அகலாமல் உள்ளங்கையிலேயே ஒட்டிக்கொண்டது.  பதறிய துர்கை அன்னையை நாடி ஓடினாள்.  அன்னை பார்த்துவிட்டுச் சிரித்தாள்.  சிவபக்தனான மஹிஷனைக் கொன்றதால் அவனைக் கொன்ற பாவத்தினால் உன் கைகளை விட்டு இந்த லிங்கம் அகலவில்லை.  உன் கையில் இருக்கும் கட்கம் என்னும் வாளால் தரையைக் கீறிக் கிளம்பும் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் உனக்குக் கையிலிருக்கும் லிங்கம் அகன்று பாவ விமோசனமும் கிடைக்கும் என்று சொல்ல அப்படியே தனது கட்கம் என்னும் வாளால் துர்கை கீற அங்கே ஓர் தீர்த்தம் தோன்றியது.  அதை இன்றும் கட்க தீர்த்தம் என்னும் பெயரிலேயே அழைக்கின்றனர்.   துர்கையின் கைகளில் இருந்த லிங்கமும் கீழே விழுந்தது.

அன்னை அதன் பிறகு ஈசனோடு இரண்டறக் கலந்து அர்த்த நாரீச்வரராக ஆனாள்.  ஆனால் அன்னை அடியெடுத்து வைத்த நாளில் இருந்து அந்தப் பிரதேசமே ஜோதி மயமாகவும், பசுமையாகவும் மாறியதால், மக்கள் அனைவரும் இந்த இடம் என்றும் இப்படியே ஜோதி வடிவாகவும், பசுமையாகவும் காட்சி அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள அன்னையும் அவ்விதமே ஆகட்டும் என அருளிச் செய்தாள்.  அன்னையை அவர்கள் அன்று முதல் பச்சையம்மனாக வழிபட்டனர்.  பயிர், பச்சையை வாழச் செய்தமையால் பச்சை வாழி அம்மன் எனவும் அழைக்கப் பட்டாள்.

இன்னொரு வரலாற்றில் வாழைப்பந்தலில்  பந்தலை அன்னையே அமைத்ததாகவும், மணலால் லிங்கம் பிடிக்க நீர் வேண்டி விநாயகனையும், குமரனையும் கேட்டதாயும், அவர்கள் வர நேரமானதால் அன்னையே நீரைத் தன் கைப்பிரம்பால் தட்டி உற்பத்தி செய்ததாகவும் பின்னர் விநாயகனும், முருகனும் கொண்டு வந்த நீரும் சேர்ந்து மூன்று நதிகளாக மாறியதாகவும் அதுதான் முக்கூட்டு என்னும் இடம் எனவும் கூறுகின்றனர்.  அப்போது அருகே இருந்த கதலிவனத்தில் அசுரன் ஒருவன் அன்னையின் தவத்துக்கும், வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் நோக்கில் வந்ததாயும் அவனை ஈசனும், விஷ்ணுவும் சேர்ந்து வாழ்முனி, செம்முனி என்னும் உருவில் வதம் செய்து அன்னைக்கு உதவியதாகவும் கூறுகிறது.  இவர்களோடு சேர்ந்து இன்னும் ஐவரும் அன்னைக்கு உதவியதாகவும் கூறுகின்றனர்.  அவர்கள் முறையே வாழ்முனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, வீர முனி, முத்து முனி, வேதமுனி ஆகியோர். செம்முனி கோபக்காரன் என்பதால் இவரைக் கட்டுப் படுத்தக் காலில் விலங்கு இருக்கும் என்கின்றனர்.  பச்சையம்மன் கோயில்களில் வெட்ட வெளியில் பிரம்மாண்டமாக இந்த ஏழு முனிவர்கள் சிலைகளையும் காணலாம். இவர்களைத் தவிர, கெளதமர் உள்ளிட்ட சப்தரிஷிகளின் உருவங்களும் சிறியதாய்ப் பின்னால் காணப்படும்.

பச்சையம்மன் கோயில்களில் கணபதிக்கும்,  முருகனுக்கும் இடம் உண்டு.  பச்சை நிற ஆடையிலேயே காட்சி அளிக்கும் பச்சையம்மனுக்கு உகந்த நாட்களாய்த் திங்கட்கிழமைகளே சொல்லப் படுகின்றன.  அம்மனுக்குப் படையலும் சைவப் படையல் தான்.  அம்மனுக்காக நேர்ந்து கொண்டு பெரிய யானை, குதிரைச் சிலைகள் வைக்கின்றனர்.  இரவில் குதிரையில் ஏறி அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம்.  ஆகவே குதிரைகள் அம்மன் குதிரை என்றே அழைக்கப் படுகின்றன. ஈசனும் இங்கே மன்னாதீஸ்வரர் என்ற பெயரில் தெற்குப் பார்த்து வீற்றிருப்பார்.  வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம் ஆவாள்.  எனினும் வாழைப்பந்தலில் முதல் முதல் அம்மன் குடிகொண்ட இடமே பச்சையம்மன் குடி கொண்ட முதல் இடமாகக் கருதப் படுகிறது.

Monday, April 27, 2015

கதை கேளுங்க, கதை கேளுங்க, மதுரை வீரன் கதையைக் கேளுங்க!

Image result for மதுரை வீரன்


மதுரை வீரன் பல குடும்பங்களின் குலதெய்வமாகக் கொண்டாடப் படுகின்றான். ஆனால் அவன் பிறந்தது அரச குலம் எனச் சிலரும் சக்கிலிய குலம் எனச் சிலரும் சொல்கின்றனர். காசி அரசனுக்குப் பிள்ளையாகப் பிறந்த மதுரை வீரனை அவன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்கு நல்லது இல்லை எனத் தந்தை காட்டில் விட்டு விட்டார். அந்தக் குழந்தையைத் தான் சக்கிலிய இனத்தவர் காட்டில் கண்டெடுத்து வளர்த்து வருகின்றனர். அவர்கள் மூலம் தென்னாட்டிற்கு வந்த மதுரை வீரனைக் கம்பள நாயக்கர் குலத்தைச் சேர்ந்த பொம்மையா நாயக்கர் மகளான பொம்மியைக் காவல் காக்க ஏற்பாடு செய்கின்றனர். பொம்மி வயதுக்கு வந்திருந்தாள். கம்பள நாயக்கர் குல வழக்கப்படி அவளைக் காட்டில் குடில் அமைத்துச் சக்கிலியர்களை வைத்துக் காவல் செய்ய வ் வைப்பது வழக்கம். அந்த வழக்கப்படி மதுரை வீரன் காவல் இருக்கையில் பொம்மி அவனைப் பார்த்துக் காதல் கொள்கிறாள். மதுரை வீரனுக்கும் பொம்மியின் மேல் ஆசை வர இருவரும் ஒருவருக்கும் தெரியாமல் ஊரை விட்டுச் செல்கின்றனர்.  மதுரைப் பக்கம் செல்லும் மதுரை வீரனும் பொம்மியும் அங்கே மிகுந்த பராக்கிரமத்துடன் இருந்து வந்த கள்ளர் சமூகத்தினரை அடக்குகின்றான். இதன் மூலம் திருமலை நாயக்கரின் படையிலும் சேர்ந்து மாபெரும் வீரனாகிறான்.

இதற்குள் தன் மகளை மதுரை வீரன் கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டதை அறிந்த பொம்மையா நாயக்கர் திருமலை நாயக்கரிடம் மதுரை வீரன் குறித்துச் சொல்கிறார். அரண்மனையில் நாட்டியக்காரி எனச் சொல்கின்றனர்.  சிலர் கள்ளர் இனத்தைச் சேர்ந்த பெண் என்கிறார்கள். வெள்ளையம்மாள் என்பவளும் மதுரை வீரனின் மேல் காதல் கொள்கிறாள். இது திருமலை நாயக்கருக்குப்பிடிக்கவில்லை. ஆனால்  மதுரை வீரன் அவளையும் மணக்கிறான். அவன் அரசர் மகன் என்பதை அறியாத திருமலை நாயக்கர் சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்குடியில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான் என எண்ணிக் கொண்டு அவனுக்கு மாறுகால், மாறுகை வாங்கிக் கொலை செய்து விடுகிறார். இரு மனைவியரும் அவனுடன் கூடவே இறக்கின்றனர். அப்போது விண்ணிலிருந்து பூமாரி பொழிய மதுரை வீரனும் அவன் மனைவியரும் அங்கேயே சிலை ரூபமாக நிலைத்து நின்று விட்டனர்.

அருந்ததி இனத்தவரின் குலதெய்வமான மதுரை வீரன் இப்போது பலருக்கும் குல தெய்வம், பல உயர்சாதியினருக்கும், பிராமணர்களுக்கும் குல தெய்வம். மதுரை வீரன் சிலை நடுவில் இருக்க அவன் இரு மனைவியரும் இருபக்கமும் இருக்கும்படியான கோலத்திலேயே மதுரை வீரன் சிலையைக் காண முடியும்.  அரிவாளை ஓங்கிக் கொண்டு முறுக்கிய மீசையுடன் மதுரை வீரன் நிற்க இருபக்கமும் இரு மனைவியரும் காணப்படுவார்கள்.  இந்தக் கதையை திரு எம்ஜிஆர் நடித்துத் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி இருக்கிறது. 

Saturday, March 21, 2015

ப.கருங்குளம் அருள்மிகு பறைநாச்சியம்மன் (பரநாச்சியம்மன்).

Image result for puravi eduppu
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இந்தக் கோயில், காரைக்குடி அருகே பட்டமங்கலம் கிராமத்திற்கருகில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூர், மற்றும் கல்லலில் இருந்து பஸ் வசதி உண்டு.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.மிகக் குறைந்த அளவே உயரமுள்ள நுழைவாயில்.
 ஆண்கள் மட்டுமே இந்தக் கோயிலில் நுழைந்து வழிபட இயலும்.  அதுவும் கை, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, மேல்சட்டை அணியாது தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

 அன்னை, எட்டுத் திருக்கரங்கள் கொண்ட திருவுருவினள். ஏழு திருக்கரங்களில் சூலம் முதலான வெவ்வேறு விதமான ஆயுதங்கள், கீழ் இடது திருக்கரத்தில் அன்னக் கிண்ணம் தாங்கி அருளுகின்றாள். அன்னைக்கு நித்தியப்படி பூஜைகள் கிடையாது. வேண்டுதல்களின் படி பூஜை, அபிஷேகங்கள் செய்யப்படுகின்றது. இது 'சிறப்புக் கொடுப்பது' என்று அழைக்கப்படுகின்றது.

 கோயிலுக்கு வெளியே. வெளியே திறந்த வெளியில், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, நொண்டி, சப்பாணி என்ற பெயர்களில் காவல் பூதங்களும், பண்டாரம், சந்நியாசி பாம்பாட்டி, பேச்சி, ராக்காயி, வீரபத்ரர், ஆஞ்சநேயர் என்று பரிவார மூர்த்திகளும் இருக்கின்றனர்.இவர்களின் பிம்பங்களும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.

 இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் கடைசி செவ்வாயில் திருவிழா நடைபெறுகிறது. அச்சமயத்திலேயே பிம்பங்கள் புதுப்பித்தலும் நடை பெறுகிறது.

கோயில் குறித்த கர்ண பரம்பரைக் கதை:

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், திண்டுக்கல் அருகில் கரந்தைமலை என்னும் சிற்றூரில் கோயில் கொண்டிருந்தாள் இந்த அம்பிகை. அவருக்கு அந்தண அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒரு நாள், கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்த அவர் மனைவி, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு திரும்பி விட்டாள். குழந்தை துறுதுறுப்பானவள். நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அவளை கண்காணிக்க, அர்ச்சகரால் இயலவில்லை. வேலைப் பளு வேறு சேர்ந்து கொண்டது. குழந்தை அங்கிருப்பதை மறந்தே போனார் அவர்.

உச்சிக் கால பூஜை முடிந்தது. கோயிலைப் பூட்டி விட்டுத் திரும்பினார். மனைவி கேட்ட முதல் கேள்வி, 'குழந்தை எங்கே?'.

பொதுவாக, நடை சார்த்தி விட்டால், பின்னர் குறிப்பிட்ட காலத்தில் திறக்கும் வரை நடுவில் திறக்கக் கூடாதென்பது விதி. ஆகவே, கோயிலைத் திறவாமல், சாவித் துவாரம் வழியே, மகளின் பெயர் கூறி வருமாறு அழைத்தார். ஆனால் ஒலித்து ஓர் அசரீரி. 'உன் மகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மாலையில் அழைத்துச் செல்'.

அர்ச்சகர் மகிழ்வுடன் வீடு திரும்பினார். ஆனால் 'பெற்ற மனம் பித்து' இல்லையா.. அம்பிகை தன் குழந்தையோடு விளையாடுகிறாள் என்பதை நம்ப மறுத்தது தாயுள்ளம். மனைவி கோபம் மிகக் கொண்டாள். அர்ச்சகரின் கூற்றை நம்பவில்லை. அவர் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டு வந்து, பொய் கூறுவதாகச் சந்தேகித்தாள். உடனே தன் குழந்தை வர வேண்டும் என்றாள். இல்லாவிட்டால், தான் இறக்கப் போவதாகக் கூறி பயமுறுத்தினாள். வேறு வழியில்லாமல், அர்ச்சகர் கோயிலுக்குச் சென்றார். தேவியிடம் மன்னிப்புக் கோரி, பூட்டைத் திறந்தார். ஆனால் அந்தோ.. கோயில் சருவறையில், குழந்தை இறந்து கிடந்தது.

'நான் கொடுத்த குழந்தை. இதோடு விளையாடுகிறேன் என்று கூறியும், நம்பாமல் கூட்டிப் போக வந்தாய். இது உனக்குக் கிடைக்காது' என்ற அசரீரி ஒலித்தது.

கோபம் கொண்டார் அர்ச்சகர். வேதனையுடன் சாபமிட்டார். 'நான் உனக்கு ஆத்மார்த்தமாகப் பூஜைகள் செய்தது நிஜமெனில், கற்கோயில் உனக்கில்லாமல் போகட்டும்.  (அக்காலத்திய) உயர்குலத்தோர் யாரும் உனக்குப் பூஜை செய்ய மாட்டார்கள்'.

அன்னையின் கற்கோயில் அழிந்தது. மூல விக்ரகம், ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஊராரால் உப்பாற்றில் விடப்பட்டது. இது மிதலைக் கண்மாயில் ஒதுங்கியதாகக் கூறப்படுகின்றது. இதை எடுக்க பலரும் முயன்ற போது, சேரியில் இருப்பவர்களின் கைகளில் மட்டுமே சிக்கியது இந்தப் பெட்டி.

பெட்டி திறக்கப்பட்டு, தேவியின் திருவுருவம் வெளியே எடுக்கபட்டது. ஊர் பெரிய மனிதரான அம்பலக்காரருக்கு ஒரு மனக்காட்சி தென்பட்டது. தனக்கு இந்த ஊரில் இடம் கொடுத்தால், இந்த ஊரை சுபிட்சமாக வைத்திருப்பதாகவும், தனக்கு கற்கோயில் அல்லாமல், விளாறிமார் கொண்டு கோயில் கட்ட வேண்டும் எனவும், ஒரு குழந்தையின் மறைவுக்குத் தான் காரணமாக இருந்ததால், தனக்கும் நிரந்தர உருவம் வேண்டுவதில்லை, சிதைந்து மாறும் மண் பொம்மையாகவே வழிபாடு செய்தால் போதும் என்றும், சேரியில் இருப்போரே தன்னை பூஜிக்க வேண்டும் என்றும் அன்னை கூறினாள். மேலும், ஒரு பெண்ணின் கோபத்தாலும் சந்தேகத்தாலுமே தனக்கு இந்த நிலை வந்ததால், தன்னை பெண்கள் தரிசிக்கக் கூடாது என்றும் கூறினாள்.

 அன்னையின் கட்டளைகளை ஊரார் ஏற்றுக் கொண்டனர். விளாறிமாரால் கோயில் கட்டப்பட்டு,   பிம்பம் கோயிலினுள் வைக்கப்பட்டது. அன்னைக்கு 'பறைநாச்சியார்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அம்பலக்காரர் அன்னையுடன் ஐக்கியமானார். அவரது திருவுருவும், சப்த கன்னியர் எழுவரின் திருவுருவங்களும் அன்னையின் அருகில் கோயிலில் இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, புரவி எடுப்புத் திருவிழா நடைபெறுகிறது. தை  மாதம், கோயில் பூசாரி, 'பிடி மண்' எடுத்து குயவர்களிடம் தருவார். குயவர்கள், பரம்பரையாக இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள். அவர்கள், மண்ணைப் பெற்றுக் கொண்டு, அதைச் சேர்த்து, அன்னைக்குப் புதிய  திருவுருவம்  செய்வர். பங்குனி மாதத்திற்குள்,  தேவிக்கும், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவருக்கும்  திருவுருவங்கள் செய்து விடுவார்கள்.

 பங்குனி கடைசி செவ்வாய் திருவிழா. அதற்கு சுமார் பத்து நாட்கள் முன்பே, ஊர்க்கட்டுப்பாடுகள் செயலுக்கு வரும். கர்ப்பிணிகள், வீட்டு விலக்கானோர், புதிதாகக் குழந்தை பிறந்தோர், ஊருக்கு வெளியே தங்க வைக்கப்படுவார்கள். கடைசி செவ்வாய்க்கு முந்தைய வெள்ளியன்று, கோயில் அமைக்கத் தேவையான விளாறிமார் சேகரிப்புத் துவங்கும். இதற்காக, நாச்சியார்புரம் என்னும் ஊருக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள். போகும் வழியெல்லாம், இவர்களுக்கு  உணவு, நீர் மோர் முதலியவை வழங்க மக்கள் கூட்டம் காத்திருக்கும்.

நாச்சியார்புரத்தில் இருக்கும் விளாறிமார் தழைகளை சேகரித்துக் கொண்டு, அன்று இரவு கம்பனனூர் ஊருணிக் கரையில் தங்குவார்கள்.  சனிக்கிழமை அதிகாலை மீண்டும் துவங்கும் யாத்திரை, கோயில் வந்து நிறைவுறும்.

சனிக்கிழமை, பழைய கோயில் அமைப்பு களையப்படும்.

ஞாயிறு அதிகாலை, கோயிலில் உரிமையுள்ளோர் புதுக் கோயிலை நிர்மாணிக்கத் துவங்குவார்கள். மாலைக்குள் விளாறிமார் கொண்டு, கோயில் அமைக்கப்படும்.

செவ்வாய் காலையில், கோயில் உரிமை பற்றி, பூசாரிகளுக்கு அம்பலக்காரர் எழுதிக் கொடுத்த பெரிய அரிவாள், ஊர்வலமாக ஊருக்குள் எடுத்துச் செல்லப்படுகின்றது. அது திரும்ப கோயிலுக்கு வந்ததும், அனைவரும் அன்னையை அழைத்து வரப் புறப்படுவார்கள்.

ஊர் சதுக்கத்தில், (இதை சவுக்கை என்றழைக்கிறார்கள்)  தைலாபிஷேகம் முதலியன செய்து அன்னையின் புது  திருவுருவம்  தயாராக இருக்கும்.  அன்னையின் புதிய திருவுருவம், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவ ரையும், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். இது 'புரவி எடுப்பு' என்று அழைக்கப்படுகின்றது.

அந்த சமயத்தில், ஊரில் மின் விளக்குகள் அனைத்தும், தெருவிளக்கு உள்பட அணைக்கப்படும்.  எண்ணை தீபங்கள் மட்டுமே எரியும். இந்த ஊர்வலம், கோயிலுக்கு வந்து நிறைவுறும். செவ்வாய் அன்று இரவு முழுவதும் வெளியே தரிசனத்துக்காக அன்னை கொலுவிருப்பாள். அன்று மட்டுமே பெண்கள் தரிசிப்பார்கள். புதன் விடியலில், கோயிலுக்குள் அன்னையின் திருவுரு வைக்கப்படும். பழைய திருவுரு, கோயிலுக்கு வெளியே சார்த்தி வைக்கப்படும். புதனன்று, வேண்டுதல்கள், பூசைகள் என்று மிகப் பெரிய விழாவாக நடைபெறும். 

பொதுவாக, அன்னைக்கு சுத்த பூசை என்னும் சாத்வீக பூஜையே நடைபெறுகிறது.  பலிகள் கொடுப்பதானால், பரிவார மூர்த்திகளுக்குக் கொடுப்பது வழக்கம்.

நிவேதனத்துக்கு கைக்குத்தல் அரிசி தான் பயன்படுத்துகிறார்கள். பத்து நாட்கள் சுத்தமாக விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள். பால் பொங்கல் பிரதான நிவேதனம். கோயில் நிவேதனங்கள் வெளியில் இருந்து ஏற்கப்படுவதில்லை. கோயிலில் உள்ளோரே தயார் செய்கிறார்கள்.

காரைக்குடி, பட்டமங்கலம் செல்வோர், பரநாச்சியம்மனைத் தரிசித்து, அருள் பெறலாம்!...