Tuesday, March 17, 2015

பாவாடை ராயனைத் தான் பத்தினியே தானழையும்!



படத்துக்கு நன்றி: கூகிளார் மூலம் மாலைமலர்ப் பத்திரிகை

பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது.

"பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்"   என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார்  என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி என்றொரு இடத்திலும் வருகிறது. இந்தப் பாவாடை ராயன் யாருனு புரியாமல் யோசனையிலே இருந்தேன்.  அப்புறமாத் தான் காவல் தெய்வமாய் இருக்குமோ என ஒரு சந்தேகம்.  காவல் தெய்வங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் தேடினப்போ கிடைச்சது பாவாடை ராயனும், அவரோட எஜமான் ஆன பருதேசியப்பரும்.

பருதேசினு ஊர் ஊராச் சுத்தறவங்களைச் சொல்றது உண்டு.  இங்கேயும் அப்படிச் சுத்தின ஒருத்தரைத் தான் சொல்றாங்க.  அவர் வேறே யாரும் இல்லை.  நம்ம சிவனார் தான்.  அதுவும் சனி படுத்தின பாடாம் அது.  எல்லாரையும் பிடிக்கவேண்டிய சனிஸ்வரனுக்கு அப்போ சிவனிடம் போகவேண்டிய நேரம்.  ஆனால் அவர் கிட்டே போனால் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே?  என்ன செய்யறது?  நாரதர் இன்னும் கொஞ்ச நாட்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் கல்யாணம் நடக்கப் போறது. அப்போப் பிடிச்சுக்கலாம்னு சொல்லி வழி காட்டறார்.  சரினு எல்லாருமா கல்யாணத்துக்குப் போறாங்க.  அங்கே பிரம்மாதான் கல்யாணம் நடத்தி வச்சுண்டு இருந்தார்.  கல்யாணம் முடிஞ்சதும் வழக்கப்படி புரோகிதம் பண்ணின பிரம்மாவுக்கு மரியாதை செய்யறாங்க சிவனும், பார்வதியும்.  அப்போ பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் ஈசன் மாதிரியே.

ஐந்து தலைகளுக்கும் தீபம் காட்டணும், நாலுக்குக் காட்டியாச்சு. ஐந்தாவது தலைக்கு எந்தத் திசையிலே காட்டறதுனு யோசிக்கும்போது, அந்தச் சமயம் நாரதர் சைகை காட்ட சனி ஈசனின் கையில் புகுந்து கொள்ள, அவர் கோபத்தோடு அந்த ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிய, பிரம்மாவுக்கும் கோபம் வந்து என்னோட இந்தத் தலை திருவோடாக உம் கையில் மாறி நீர் ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுக்கவேண்டும்னு சாபம் கொடுக்கிறார்.   முன்னைப்பழம்பொருளுக்கும் முன்னைப்பழம்பொருள் ஒரு ஆண்டியைப் போல, பித்தனைப் போல பிச்சை எடுக்கிறார்.  பிக்ஷாடனராக ஒவ்வொரு ஊராக வந்து பிச்சை கேட்கிறார்.  எங்கேயும் பிரம்ம கபாலத்தில் அவர் வாங்கும் பிச்சையால் கபாலம் கையை விட்டுப் போகவில்லை.  அப்போது....

தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்களை நடத்திய பருதேசியப்பரால் தன் கைக் கபாலத்தைக் கைகளிலிருந்து எடுக்க முடியாதா?? இறைவனுக்குத் தெரியாதா? எல்லாம் வல்லவனுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா?  எனினும் எடுத்துக்கொண்ட விளையாடலை பூரணமாக விளையாடி முடிக்கவேண்டுமே.  ஆகவே கடைசியாகக் கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை வந்து சேர்கிறார் ஈசனாகிய பரதேசி.  நமக்கெல்லாம் ஞானப் பிச்சை அளிக்கும் அவன் நம்மிடமிருந்து பிச்சையாக வாங்குவது நம்முடைய வினைப்பயன்களையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அன்றோ. அவற்றை வாங்கிக்கொண்டு அவன் நமக்குத் திரும்பத் தருவதோ மாபெரும் செல்வம் அல்லவோ!   ஆனால் இதை எத்தனை பேர் அறிவார்கள்? அப்படியே பாவாடை ராயனும் அறியவில்லை.

ஊர் அடங்கியவேளையிலே பரதேசிக் கோலத்தில் வந்து சேர்ந்த பருதேசியப்பரைக் கண்ட ஊர்க்காவல்காரனான பாவாடைராயன்  இவ்வுலகத்து மாந்தருக்கெல்லாம் வேண்டியது தருபவர் ஆன அவர் மேல் சந்தேகம் கொண்டு அந்தப் பொன்னான அருள் தரும் அபயக்கரங்களுக்கு விலங்கிட்டுச் சிறையில் அடைக்கிறான்.  காலையில் விசாரணை செய்து கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிச் சென்று இரவு முழுதும் ஓய்வு எடுத்துக்கொண்டு காலை திரும்பினான் பாவாடை ராயன்.  வந்து பார்த்தால்??

ஆஹா, இது என்ன அற்புதக் காக்ஷி, இந்தக் கண்கள் காண்பது கனவா? நனவா? தன் சுய உருவோடு நின்றிருந்த ஈசனைக் கண்ட பாவாடைராயன் நடுநடுங்கிப் போனான்.  "என் ஐயனே, உன்னையா சிறையிலடைத்தேன்!" என்று கதறி அழுதவண்ணம் ஈசன் காலடிகளில் விழுந்தான்.  தன்னை மன்னிக்கும்படியும், தான் அடியவனாய் இருந்து பணிவிடைகள்  ஆற்ற விரும்புவதாயும், சாபம் தீரும்வரையிலும் ஈசன் அங்கே குடிகொள்ளவேண்டும் எனவும் வேண்ட, ஈசனும் சம்மதித்து அங்கே குடியேறுகிறார்.

இந்தப் பருதேசியப்பருக்குக் கையில் பிக்ஷாபாத்திரமாகக் கபாலத்தை மட்டுமே ஏந்திய இவருக்குக் காவல்காரனாம் பாவாடைராயன்.  இவர்கள் கோயில் கொண்டிருக்கும் இடம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அழகிய கிராமம் ஆன வல்லம்படுகையில் உள்ளது. மூலவர் பருதேசியப்பர்.  இவருக்குக் காவலாக  விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் பிராகாரங்களில் இடம் பெற்றிருக்க ஆலயத்தின் பின்னால் உள்ள கொட்டகையில் தன் இரு மனைவிமாரான முத்துநாச்சி, அரியநாச்சி ஆகியோருடன் பாவாடைராயன் காணப்படுகிறார்.




படத்துக்கு நன்றி கூகிளார்

இந்தப் பருதேசியப்பர் கோயிலின் எதிரே சற்றுத் தள்ளி காணப்படும் ரயில் தண்டவாளத்தை 300 ஆண்டுகள் முன்னர் முதல்முதல் அமைக்கும்போது ஆங்கிலேயர்கள் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில் பாதையை அமைக்கத் திட்டம் போட்டுக் கோயிலை இடிக்க முயன்றிருக்கிறார்கள்.  அதன் முன்னர் வரும் கோயிலின் அருகே உள்ள இடங்களில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது.  கோயிலை இடிக்க உத்தரவு கொடுத்துவிட்டுப் போனால் மறுநாள் ஏற்கெனவே பதிக்கப்பட்ட தண்டவாளங்கள் வேறு திசையில் தூக்கி வீசப்பட்டிருந்தன.  அதிர்ந்த ஆங்கிலேய அதிகாரி மீண்டும் அதே இடத்தில் பதிக்க மீண்டும் தண்டவாளங்கள் தூக்கி வீசி எறியப்பட, மூன்றாம் முறை முயன்றபோது இஞ்சினியரின் கண்பார்வையே பறிபோனதாம்.  பின்னர் உள்ளூர் மக்கள், பெரியதனக்காரர்களின் வேண்டுகோளையும், பருதேசியப்பரின் சக்தியையும் கண்டு வியந்த ஆங்கிலேயர் கோயிலில்  இருந்து சற்றுத் தள்ளி தண்டவாளங்களை அமைத்தனராம்.  அவர்களுக்குப் பரிகாரமாக மண்குதிரை செய்து வைக்கச் சொல்ல அப்படியே செய்தும் வைத்திருக்கின்றனர்.  இந்தப் பாவாடைராயன் கதையைப் படித்ததும், மாரியம்மன் தாலாட்டின் பொருள் நன்கு புரிய ஆரம்பித்துள்ளது.


4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கடைசிச் செய்தி ஆச்சர்யப்பட வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், படிக்கையில் எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

      Delete