Friday, June 26, 2015

அருள்மிகு வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயில், கண்டமங்கலம்...

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
தஞ்சையில், குடமுருட்டி ஆற்றை ஒட்டிய ஊரே கண்டமங்கலம். திருக்காட்டுப்பள்ளியின் அருகில் அமைந்திருக்கிறது. இது.. வளமான இந்த ஊரின் வளமைக்கும் வாழ்வுக்கும் காரணமாக, அவ்வூர் மக்கள், ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மனின் அருளையே குறிப்பிடுகின்றனர்.

அம்மன், இவ்வூரில் எழுந்தருளிய வரலாறு மிக அதிசயமானது. அதை அறியும் முன்பாக,  திருக்கோயில் அமைப்பை ஒரு முறை பார்த்து விடலாம்!.. திருக்கோயில், எளிமையான சுற்றுச் சுவருடன் கூடியதாக அமைந்திருக்கிறது. உயரமான முன் மண்டபத்தில், ஸ்ரீ வாராஹி தேவி அருளுகின்றாள். அங்கு, ஸ்ரீ கணபதியையும், ஸ்ரீபாலசுப்பிரமணியரையும் தரிசிக்கலாம். அதை அடுத்து, அன்னை அருளாட்சி செய்யும் கருவறை..

நான்கு திருக்கரங்களுடன், இடது திருக்காலை மடித்து, வலது திருவடி கீழிருக்குமாறு அமர்ந்த திருக்கோலத்தில் அருளுகிறாள் அம்பிகை.. பெரும்பாலான கிராம தேவதைகள் அமர்ந்திருக்கும் இந்த நிலையினை, 'சுகாசனம்' என்பது வழக்கம். அம்மன், தன் நான்கு திருக்கரங்களில்  முறையே சூலம்,  அங்குசம், பாசம், அன்னக்கிண்ணம் முதலியவற்றைத் தாங்கி அருளுகின்றாள்.

கோயிலின் திருச்சுற்றில், ஸ்தல விருட்சமான வேப்ப மரம். மிக அதிசயமானதொரு வேப்ப‌ மரம் இது.. இதில் ஆங்காங்கே முண்டும் முடிச்சுமாக இருக்கிறது. அவற்றில், ஒன்றிரண்டிலிருந்து, பளபளவென எதுவோ தெரிகிறது. இதைப் பற்றிய விவரம் அதிசயமானது!.. இத்திருக்கோயிலில் வேண்டுதல் செய்பவர்கள், அது நிறைவேறியதும், மணிகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கமிருக்கிறது. ஸ்தல விருட்சத்தில் அடிக்கப்பட்ட மணியை, காலப்போக்கில் மரமே மெல்ல உள்வாங்கி, தன்னுள் மறைத்துக் கொள்கிறது என்கிறார்கள். மரத்தை நெருங்கிப் பார்த்தால், இது உண்மை என்றே புலனாகிறது. பெரும்பாலான மணிகளின் கீழ்ப்புறம் மரத்துக்கு வெளியேயும், மேற்புறம் மரத்துக்குள் மறைந்தும் இருக்கிறது!!!!.  

சுற்றுச் சுவரை ஒட்டிய சிறு சந்நிதிகளில் அம்மனின் பரிவார தேவதைகளான மதுரை வீரன், முத்து வழியான், மாமுண்டிக் கருப்பு, முத்தாளு இராவுத்தர் ஆகியோர் அருளுகிறார்கள்..

பரிவார தெய்வங்களில், ஒரு தெய்வத்தின் பெயர் சற்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றலாம். பல்லாண்டுகள் முன்பு வாழ்ந்தவரே முத்தாளு இராவுத்தர். ஒரு முறை, அவர் செருப்பணிந்து, குதிரை மேல் ஏறிக் கொண்டு, திருக்கோயிலில் நுழைய முயன்றார். திருக்கோயில் பணியாளர்களின் எச்சரிக்கையையும் மீறி, அவர்  உள் நுழைய முயன்ற போது, எதிர்பாரா விதமாக, குதிரை மிரண்டது. முத்தாளு இராவுத்தர், நிலை குலைந்து விழுந்தார். விழுந்த வேகத்தில், அவருக்கு பலமான அடிபட்டது. உயிர் விடும் தருவாயில், எங்கும் நிறை சக்தியின் மகத்துவம் புரிந்து பணிந்தார். அம்மன் அருள் புரிந்து அவரை, தன் பரிவார தேவதைகளில் ஒருவராக ஏற்றாள்.

அவருக்கு திருக்கோயிலினுள் தனி சந்நிதி அமைத்து வழிபாடு துவங்கியது. திருவிழாவில், அம்மன் முன்பாகச் செல்லும் பரிவாரங்களில் ஒருவராகவும் இடம் பெறுகிறார் அவர்.

அம்மனுக்கென தனிக்கோயில் இருந்த போதிலும், அம்மனின் உற்சவ மூர்த்தி, அவ்வூரிலேயே இருக்கும் கைலாசநாதர் திருக்கோயிலிலேயே இருக்கிறது. வருடத்துக்கு பத்து நாட்கள் மட்டுமே, அன்னையின் உற்சவ மூர்த்தி, வாத்தலை நாச்சியம்மனின் திருக்கோயிலில் இருக்கும். மற்ற நாட்களில் கைலாசநாதர் திருக்கோயில் மட்டுமே உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம். உற்சவரின் திருமுடி (கிரீடம்) பின்புறம், சக்திச் சக்கரம் எழுதப்பட்டுள்ளதை சிறப்பாகக் கூறுகின்றார்கள்.

ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மன், கோயில் கொண்டருளிய வரலாறு:

இவ்வூரில், ஒரு முறை பெருமழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்ததும், வெள்ளத்தில் கரை ஒதுங்கியது ஒரு சிற்பம்.. அம்மனின் திருவுருவமே அது!.. வெகு காலமாக, கிராமத்துக்கென காவல் தெய்வமில்லையே என்று வருந்தியிருந்த அவ்வூர் மக்களின் ஏக்கம் போக்கவே, தன்னை இவ்வாறு வெளிப்படுத்தினாள் அம்மன் என்று சொல்கிறார்கள்.

கண்டெடுக்கப்பட்ட அந்த அம்மனை, தங்கள் காவல் தெய்வமாக ஏற்றார்கள் கண்டமங்கலம் ஊரினர்.. ஊரில் முன்பு வாராஹியை வழிபட்டு வந்த இடத்திலேயே, இந்த அம்மனுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. முதலில் திரிசூலி என்றும் லோகேஸ்வரி என்றும் வழிபடப்பட்டாலும், அன்னைக்கு 'வாத்தலை நாச்சியம்மன்' என்ற திருநாமமே நிலைத்தது. இந்த  திருநாமம் ஏற்பட்ட வரலாறு தெரியவில்லை.

விமரிசையாக நித்ய பூஜைகளையும், வருடத்திற்கொரு முறை, காப்பு கட்டி திருவிழாவும் கொண்டாடி வந்த மக்கள், காலப் போக்கில் விழா எடுக்க மறந்தார்கள். விழா எடுப்பது, பல்வேறு ஆகம காரணங்களை உள்ளடக்கியது. ஊரின் நன்மையே அதில் அடங்கியுள்ளது. அதை அறியாமல், விழா எடுக்க மறந்த‌ தன் மக்கள் செய்த தவறை அவர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்பினாள் அன்னை.  தல விருட்சமாயிருந்த வேப்பமரம் பட்டுப் போகத் துவங்கியது. ஊரில் ஆங்காங்கே நெருப்பு பற்றத் துவங்கியது.  அப்போதும், தம் தவறை உணராத‌  மக்களின் முன்பாக, தன் அருளாடலை வெளிப்படுத்தினாள் அம்மன்.

ஒரு நாள், திருக்கோயிலின் உள்ளே, பூசாரியின் ஆராதனைத் தட்டு, காரணம் ஏதுமின்றி பறந்து விழுந்தது.. வழிபட வந்திருந்த பெண்ணொருத்தியினுள்ளே அருட்சக்தியாகப் புகுந்து, விழா எடுக்காததன் விளைவுகளை சுட்டிக் காட்டினாள் அன்னை. .. மக்களின் அறியாமை அகன்றது. விழா எடுப்பதாக, அம்மனின் திருமுன்பு உறுதி கூறினர். அவ்வாறு செய்தால், எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர்க்கும் என்று அருள் வாக்களித்தாள் அம்மன். விழாவுக்குக் காப்பு கட்டியதும், கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் செய்தருளினாள். எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர் விட்டது!!!!...

திருவிழா!..

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, அம்மனின் திருவிழா, வருடத்திற்கொரு முறை, பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது.  பங்குனி மாதம், முதல் செவ்வாய், அம்மனுக்குக் காப்புக் கட்டுகிறார்கள். இரண்டாவது செவ்வாய் தொடங்கி, பத்து நாட்கள் விழா நடைபெறுகிறது.  அன்னையின் உற்சவ மூர்த்தி, கைலாசநாதர் திருக்கோயிலில் இருந்து எடுத்து வரப்படுகிறது. விழா  நடைபெறும் பத்து நாட்களும், வாத்தலை நாச்சியம்மன் கோயிலிலேயே உறசவ மூர்த்தியை வைத்து வழிபடுகிறார்கள்....

ஒன்பதாம் நாள் 'எல்லைச் சுற்று' என்னும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெறும். அன்று, அம்பிகை, தன் பரிவார தெய்வங்களுடன், தன் காவல் எல்லைகளைத் தொட்டு, சுற்றி வருகிறாள்.

அந்த சமயத்தில், உற்சவ மூர்த்தியின் திருநெற்றியில் துடைக்கத் துடைக்க வியர்வை பொங்குவது பேரதிசயமான ஒரு நிகழ்வாகும். இதைப் பார்க்கவென்றே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்!.

பத்து நாட்கள் உற்சவம் முடிந்து, காப்பு கழட்டப்பட்டதும், உற்சவமூர்த்தி, மீண்டும் கைலாசநாதர் கோயிலுக்குக் கொண்டு வரப்படும். அப்போது அம்மன், மிகுந்த உக்ரமாகக் காணப்படுவதாக ஐதீகம். ஆகவே, உற்சவரை, வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயிலில் இருந்து, கைலாசநாதர் திருக்கோயிலுக்கு எடுத்து வரும் போது, எதிரே எந்தப் பெண்ணும் வரக் கூடாது என்று கட்டுப்பாடு...

உற்சவ மூர்த்திக்கு வெள்ளை உடுத்தி, தப்படித்தவாறே வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயிலில் இருந்து, கைலாசநாதர் திருக்கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அந்த ஒலி கேட்டதும், ஊர்ப் பெண்கள் தத்தம் வீடுகளுக்குள்ளே சென்று விடுவர். கைலாசநாதர் திருக்கோயில் வந்ததும், அங்கு ஊர்ப்பெண்கள், அம்மனுக்கு முன்பு, உக்ரத்தை தணிக்கும் விதமாக மாவிளக்கு வழிபாடு செய்கிறார்கள்.

இத்தனை சிறப்பு மிக்க, ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மனை தரிசிக்க வேண்டி கண்டமங்கலம் செல்ல வேண்டுமானால், தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியே திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியாக‌ செல்லலாம். இந்தத் திருக்கோயில், கண்டியூர், தோகூர் நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இவ்வூர் வந்து செல்ல, பேருந்துகள், ஆட்டோ முதலான வாகன வசதிகள் யாவும் நல்ல முறையில் அமைந்திருக்கின்றன.

1 comment:

  1. சிறப்பான பதிவு. செவிவழிச் செய்திகளும் நிகழ்வுகளும் அருமையாகத்தொகுப்பட்டுச் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. அம்மன்கோவில் திருவிழா காப்புக்கட்டு பெரும்பாலும் செவ்வாய் கிழமைகளிலேயே கட்டப்படுவதைக் காண்கிறேன். செட்டிநாட்டுப்பகுதிகளில் நாச்சி அம்மன் திருவிழா செவ்வாய் என்றே அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிழமையின் முக்கியத்துவம் அறியத் தாருங்கள் திருமிகு பார்வதி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete