Tuesday, March 17, 2015

சமயபுரம் மாரியம்மனின் தாய் ஆதி மாரியம்மன்!

ஆதி சமயபுரம் கோயிலின் நுழைவாயில்.
மாகாளிக்குடியை அடுத்து நாங்கள் சென்றது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம்.  இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். சமயபுரம் மாரியம்மன் இங்கே தான் பிறந்தாள் எனவும் அவளுக்கு இது தாய் வீடு எனவும் சொல்கின்றனர்.  இந்த அம்மனும் சமயபுரத்தை நோக்கிய வண்ணமே அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.  இங்கே அம்மனின் சக்தி மிகவும் அதிகம் என்பதால் படங்கள் எடுக்கத் தடை.  மூலக் கோயில் இன்னமும் ஓட்டுக்கூரை போட்ட கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது.  அங்கே தான் விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுக்கின்றனர்.  இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்ட வேண்டிப் பலமுறை முயன்றிருக்கின்றனர்.  ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்கல் ஏற்படப் பின்னர் ப்ரச்னம் கேட்டதில் இங்கே புதுமை வேண்டாம் என அம்மனே சொல்லி விட்டதாகவும், அபிஷேஹ அர்ச்சனைகளுக்குப் பக்கத்திலே ஒரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து கொள்ளும்படியும் உத்தரவு கிடைத்துள்ளது.  அதன் பேரில் இதை ஒட்டியே கொஞ்சம் நவீனமாகப் புதியதொரு சந்நிதியில் இந்த அம்மனின் சக்தியில் மறுபாதி எனச் சொல்லும் வண்ணம் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.  இவளுக்கே அபிஷேஹ ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சமயபுரம் மாரியம்மன் ஆதியில் இங்கு தான் கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கின்றனர். ஶ்ரீரங்கம் கோயிலில் இருந்த வைஷ்ணவி என்னும் அம்மன் உக்கிரமாய் இருந்ததால் அந்த அம்மன் விக்கிரஹத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்த இடம் தான் இந்த இனாம் சமயபுரம் என்று சொல்லப்படுகிறது. இதை அரண்மனை மேடு என்றும் அழைக்கின்றனர். ஒரு சமயம் கங்க நாட்டரசனுக்கு வாழ்க்கைப்பட்ட சோழ இளவரசிக்கு இங்கே ஒரு மாளிகை இருந்ததாயும் பின்னர் இது பாழடைந்து போய் வேம்புக்காடாக மாறியதாயும் சொல்கின்றனர்.  இஸ்லாமியப் படையெடுப்பின் போது இங்கிருந்த அம்மனின் உற்சவ விக்ரஹத்தை மறைத்து வைக்க வேண்டி எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

அப்போது கொள்ளிடக்கரையில் இப்போது   கோயில் இருக்கும் இடத்தில் விக்ரஹத்தைக் கீழே வைத்து விட்டு வீரர்கள் இளைப்பாறினார்களாம். , பின்னர் மீண்டும் விக்ரஹத்தை எடுத்துச் செல்ல நினைத்தபோது விக்ரஹம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  அந்த விக்ரஹம் சில குழந்தைகளால் கண்டெடுக்கப் பட்டு விளையாட்டுப் பொருளாக மாறிற்று எனவும், ஊர் மக்கள் அதைக் கண்டு மாரியம்மன் சிலை என்பதைக் கண்டறிந்து மீண்டும்  கோயிலிலேயே சிலையை வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அங்கிருந்த ஒரு பெண் கோயிலில் வைக்க வேண்டாம் எனத் தடுத்திருக்கிறாள்.  பின்னர் அம்மனின் அருளை நேரடியாகப் பெற மக்கள் பூக்கட்டிப் பார்க்க அதிலும் அம்மன் சிலையை அங்கே கொண்டு வர வேண்டாம் என்றே வந்ததாம்.  ஆகவே ஒரு யானை மீது அம்மன் சிலையை ஏற்றி யானை எங்கே கடைசியாய் நிற்கிறதோ அங்கே கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டு யானை மீது சிலை ஏற்றப்பட்டது.  யானை சிறிது தூரம் சென்றதும் படுத்துவிட்டது.  அந்த இடத்திலேயே அந்த அம்மன் சிலையை வைத்து வழிபட்டனர்.  இவளை ஆதி மாரியம்மன் என்கின்றனர்.  இவள் தெற்கு நோக்கிக் கொண்டு தற்சமயம் சமயபுரத்தில் குடி கொண்டிருக்கும் மாரியம்மனைப் பார்த்த வண்ணம் காட்சி அளிப்பாள்.  இந்தக் கோயில் தற்போதைய சமயபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  சமயபுரம் மாரியம்மன் வருடத்தில் ஒரு முறை பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அல்லது சித்திரை மாதம் முதல் ஞாயிறு அன்று இனாம் சமயபுரத்தில் உள்ள தாயைப் பார்க்கச் செல்வதாகவும், அப்போது ஊர் மக்கள் சமயபுரம் மாரியம்மனைத் தங்கள் பெண்ணாகக் கருதிச் சீர் வரிசைகள் கொடுப்பதாகவும் ஐதீகம்.  இந்நிகழ்ச்சி சமயபுரம் மாரியம்மனின் பூச்சொரிதல் திருவிழாச் சமயம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலை முழுமையாகப் படம் எடுப்பதைத் தடுத்துவிட்டனர். இவளே ஆதி சமயபுரம் மாரியம்மன் எனப்படுகிறாள்.

1 comment:

  1. தெரிந்து கொண்டேன். இதுமாதிரி சம்பவங்கள் எல்லாம் முன்னர் நடந்ததாகவே இருக்கின்றன. இப்போது எதுவும் நடப்பதில்லை, இல்லை? :)))))))))

    ReplyDelete