Friday, July 22, 2016

பூவாடைக்காரி

முனைவர்.சுபாஷிணி

தெய்வங்கள் மனிதர்களைப் படைத்தன என ஒரு சாரார் சொல்கின்றார்கள். மனிதர்கள் படைத்த தெய்வங்கள் பற்றி சில தகவல்கள் தரலாம் என நினைக்கின்றேன்..

1. பூவாடைக்காரி

தமிழகத்தின் கிராமப்புறப்பகுதிகள் பல கதைகளை உள்ளடக்கியவை. இப்படித்தான் தெய்வங்களும்! ஒரு கிராமத்தில் ஒரு கோயில் இருக்கும். அங்குச் சென்று கேட்டால் அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு பெயர் சொல்வார்கள். காரணத்தைத் தேடினால் அதன் பின்னணியில் ஒரு கதை இருப்பது தெரிய வரும்.
இப்படித்தான் அண்மையில் ஒரு நூலில் பூவாடைக்காரி என்ற பெண் சாமி உருவான கதையை வாசித்து அறிந்து கொண்டேன்.
தஞ்சையை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பாளையக்காரர்கள் ஆளும் வகையில் ஏற்பாடு இருந்தது. இந்தப் பாளையக்காரர்களின் படை வீரர்களில் பலர் குடிகாரர்களாகவும் பெண்பித்தர்களாகவும் இருந்திருக்கின்றனர். அப்படி தஞ்சையின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்த தரங்கம்பாடியில் பெண் குழந்தைகள் பூப்படைந்து விட்டால் அச்செய்தி இந்த வீரர்களுக்கு எட்டினால் அந்தப் பெண் பிள்ளைகளைக் கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவர்களைக் கொன்று விடுவதோ அல்லது டச்சு நாட்டு வணிகர்களுக்கு அடிமைகளாக விற்பதோ என்ற வகையிலான அவலம் நடந்திருக்கின்றது.
இத்தகைய கொடுமையிலிருந்து தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற பெற்றோர் சிலர் முடிவு செய்து செயல்படுத்தியிருக்கின்றனர். அதாவது அவர்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் பூப்படைந்து பெரியவளானால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு குழியைத் தோண்டி அக்குழிக்குள் எண்ணெய் விளக்கொன்றை வைத்து அதை ஏற்றி வைக்கும் படி அச்சிறுமியிடம் சொல்வார்களாம், குழந்தை உள்ளே சென்றதும் மண்ணைத் தள்ளி குழியை மூடி விடுவராம்.
பிறகு சில சடங்குகளைச் செய்து அங்கே பூ, பழம் சாம்பிராணி ஏற்றி, அச்சிறுமி இறந்த இடத்தைக் கோயிலாக அமைத்து தெய்வமாகச் அச்சிறுமியை வழிபட்டிருக்கின்றனர். பின்னர் நாள்தோறும் அங்கே மாலையில் விளக்கேற்றி அச்சிறுமி இறந்த நாளைப் பக்தி உணர்வுடன் ஆராவாரத்துடன் வழிபட்டு வந்துள்ளனர். பாளையக்காரர் பின்னர் வீட்டுச் சிறுமி பற்றி விசாரித்தால் அம்மை நோய் வந்து அவள் இறந்து போனாள் எனச் சொல்லி சமாளித்திருக்கின்றனர்.
இப்படிப் பெற்றோராலேயே கௌரவக் கொலை செய்யப்பட்ட சிறுமிகளைப் பூவாடைக்காரி எனப் பெயரிட்டு வணங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது.
சிறுமியர் இப்படி கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் என்று அறியும் போது மனம் பதைபதைக்கின்றது. கொடிய பாளையக்காரர்கள், அவர்தம் அதிகாரிகளிடமிருந்து தம் வீட்டுக் குழந்தைகள் தப்பித்து வாழ முடியாது என எண்ணும் பெற்றோர் தாமே தம் குழந்தைகளை இப்படிக் கொன்று சாமிகளாக ஆக்கியிருக்கின்றனர்.
பூவாடைக்காரி பிறந்த கதை இது. இன்னும் எத்தனை எத்தனை சாமிகள் மனிதர்கள் கொடுமைகளினாலும் இயலாமைகளினாலும் உருவாக்கப்பட்டார்கள் எனத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறேன்.

நூல் குறிப்பு: தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி- ஆ.சிவசுப்பிரமணியன்.
அன்புடன்
சுபா
குறிப்பு - தரங்கம்பாடி பகுதி பற்றி அறிந்தோர் இந்த சாமி பற்றி மேலதிக தகவல் அறிந்தால் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்