Wednesday, July 1, 2015

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன், நாட்டரசன் கோட்டை..

Image courtesy: Google Images
'கண் கொடுக்கும் தெய்வம்' என பக்தர்கள் கொண்டாடும், அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மனின் திருக்கோயில், சிவகங்கையிலிருந்து ஆறு கிலோ  மீட்டரில் அமைந்திருக்கிறது..காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோயில், சிவகங்கையிலிருந்து இங்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன.

பெயர்க் காரணம்:

ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.

'பூணுமெழிற் காளி எதிர் பொருந்தவர் மெய் கண்ணில் காணவர முற்றமையால் கண்ணுடையாள்' என்கிறது காளையார்கோயில் புராணம்.

கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், 'நேத்ராம்பிகா' என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், 'கண்ணாத்தாள்' என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.

ஆலய அமைப்பு:

சுயம்பு மூர்த்தியான அம்பிகையின் அருட்கடாட்சம் போல், விரிந்து பரவியிருக்கிறது திருக்கோயில்..திருக்கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உள்ளடக்கியது. திருக்கோயிலின் முன்பாக திருக்குளம்..சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடியதாக இருக்கிறது தேவியின் திருக்குளம். இது, சதுர அமைப்புடன், தூண்கள் உடையதாக விளங்குகிற சொக்கட்டான் மண்டபத்துக்கு வடபாகத்தில் அமைந்துள்ளது. இதுவே இத்திருக்கோயிலின் தீர்த்தம்.. குடிநீராகப் பயன்படுத்துவதால் தற்போது வேறு பயன்பாடுகள் இல்லை.. சிறிது காலம் முன்பு வரை நீராடுதல் அனுமதிக்கப்பட்டிருந்தது..

Image courtesy: Google Images
அன்னையின் அருட்சக்தி,  இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக‌
ஐதீகம்.. கண் நோய்கள் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில்  விட்டு கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை..குளத்தின் அருகில், கோயிலுக்கு முன்பாக, சிறிய அளவில், சித்தி விநாயகர் திருக்கோயில். இதை வழிபட்ட பின்பே, கோயிலுக்குள் செல்லும் மரபிருக்கிறது.

கோயிலில் நாம் முதலில் நுழைவது, பெரிய தூண்களை உள்ளடக்கிய சொக்கட்டான் மண்டபத்திலேயே......சொக்கட்டான் மண்டபம்,  பெரிய அளவிலானது. ஒரு படையே இதன் நிழலில் தங்கலாம். அவ்வளவு பெரியது. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள்.. ஒரு பக்கமாக, சரும நோய்கள் தீர, அன்னைக்கு உப்பு, மிளகு வாங்கிப் போடுவதாகப் பிரார்த்தனை செய்தவர்கள், அதைச் சேர்க்கும் மரப் பெட்டி இருக்கிறது.  கண் நோய்கள் வந்தவர்கள், இந்த மண்டபத்தில் 48 நாட்கள் தங்கி, குளத்தில் நீராடி, அன்னையை வழிபட்டால், கண் நோய்கள் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.. முற்காலத்தில், இதனை பலர் செய்து பயனடைந்தனர் என்கிறார்கள்.

அதனை அடுத்து, பக்தர்கள் நின்று வழிபடும் மகா மண்டபம்.. மிகப் பிரம்மாண்டமான துவார பாலகிகள் (பூத கணங்கள்)!.. அவர்களிடம் அனுமதி பெற்று, உள்ளே சென்றால், அர்த்த மண்டபம் (இடை நாழி). முதற் பூஜை கொண்டருளும் அனுக்ஞை விநாயகர், அருகில் உற்சவர் திருமேனிகள், அம்மனின் உற்சவத் திருமேனியான 'களியாட்டக் கண்ணாத்தாள்' ஆகியோர் அருளுகின்றனர். கருவறையில், அன்னை ஸ்ரீகண்ணுடைய நாயகியின் அற்புத தரிசனம்... அன்னையின் திருக்கோலம் அமர்ந்த நிலை.. உத்குடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள் அம்மன்.. பொதுவாக, கிராம தேவதைகள், இந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தால், மிகுந்த நியமங்களுடன் கூடிய வழிபாட்டு முறைகள் அவசியம்.. அன்னையின் வலது பாதம் பீடத்தின் மேல் ஊன்றிய நிலையில் இருக்க, இடது திருவடி, கீழே சண்டாசுரனின் தலை மேல் இருக்கிறது.

அன்னையின் பீடம், விஜயா பீடம்.. அன்னையின் திருவடிவம், மகாகாளியின் திருவடிவங்களில் ஒன்றான‌ 'நிசும்ப மர்த்தினி' வடிவம். எட்டுத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள் அம்பிகை...பின் ஆறு திருக்கரங்களில் முறையே, கிளி, பாசம், வாள், உடுக்கை, கேடயம், மணி முதலியவற்றை ஏந்தி, உயர்த்திய வலது மேற்கரத்தில் சூலம் தாங்கி, இடது கீழ்க்கரத்தில் பான பாத்திரமும் தாங்கிய திருக்கோலம்.. சூலம், சண்டனின் மார்பு நோக்கி அமைந்திருக்கிறது..கரங்களில் வளையல்களும், திருமார்பில் முத்தாரமும், திருத்தாலியும் அணிந்து, 'ஜ்வாலா கேசம்' என்னும் கதிர் மகுட தாரிணியாக, அருள் பொங்கும் திருவிழிகளுடன், சற்றே அழகுற தலைசாய்த்து,  அருட்காட்சி அளிக்கிறாள் அம்பிகை...

சண்டாசுர வதம் செய்த திருக்கோலம் என்றாலும், அம்பிகை, ஞானம் அருளும் சகல கலா வல்லி.. அம்மனின் திருக்கரங்களுள் ஒன்றில் இருக்கும் கிளி, ஞானத்தையும், மற்றொன்றில் இருக்கும் வாள், கூர்ந்த, உண்மைப் பொருளை உணர்ந்த புத்தியையும் குறிப்பதாக ஐதீகம்.. சித்தர்களில் ஒருவரான அழுகுணிச் சித்தர், ஞான ஸ்வரூபிணியாகிய அம்பிகையால் அருளப் பெற்று, இத்திருத்தலத்தில் சித்தியடைந்திருக்கிறார்.

அபிஷேக நீர் விழும் தீர்த்தத் தொட்டியின் அடியில் அவர் அடங்கியிருப்பதாக தல புராணம் கூறுகிறது. ஆனால், அம்மையின் பீடத்தின் கீழ் இருக்கும் (அக்கால) சுரங்க அறையிலேயே அவர் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது என்கிறார்கள்.. கருவறையை அடுத்த மண்டபத்தின் தரையில், சற்றுத் தூக்கிய ஒரு சதுரக் கல்லை சுட்டிக் காட்டி, முற்காலத்தில் அதுவே சுரங்கப் பாதையின் வாசல் என்றார் திருக்கோயில் பூசகர்.

கிராம தேவதைகள் சிரத்தில் பெரும்பாலும் கதிர் (அக்னி)மகுடம் காணப்படுவதன் வழக்கம், தீமைகளை அழிப்பதோடு அல்லாமல், மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்கும் சக்தி என்பதன் அடையாளம் என்று சொல்கிறார்கள்...

அன்னையின் எதிரே பெண் வடிவு கொண்ட வேதாளம்.. அம்மனின் திருநாமங்களுள் ஒன்றாக, ஆதி வேதாள நாயகி என்ற திருநாமமும் சொல்லப்படுகிறது. அம்மனின் கொடி, வேதாளக் கொடி.

மகா மண்டபத்தில், கொடி மரமும் அமைந்திருப்பதால், அதைக் கம்பத்தடி மண்டபம் என்றும் சொல்கிறார்கள்.. மண்டபத்தின் வடபுறம், வீரபத்திர சுவாமியும், சிறு வடிவில் காளியும் கோயில் கொண்டருளுகின்றனர்.  கீழ்ப் பகுதியில், பைரவர் கோயில் கொண்டருளுகிறார். உள்பத்தி பிரகாரம் ஒன்றும், வெளிச்சுற்று பிரகாரம் ஒன்றும் அமைந்திருக்கிறது..  உள்பத்தியின் கன்னி மூலையில், அபிஷேக விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது.. கருவறை விமானம், இரண்டு தள (துவி தள) விமானம், மூன்று ஸ்தூபிகளைக் கொண்டுள்ளது. பிரகாரம் சுற்றி வருகையில், அபிஷேக நீர்த் தொட்டியைக் கண்டு வணங்கலாம்..

தல புராணம்:

இவ்வூருக்கு தெற்கே அமைந்திருக்கும் கிராமம் பிரண்டகுளம். இதன் வழியாக, ஒரு யாதவன், பால் எடுத்து வரும் போது, நாட்டரசன் கோட்டைக்கு அருகில் வருகையில் ஒரு கல் இடறியதால், பால் குடம் தவறி, பால் முழுவதும் கழனியில் கலந்தது. ஒரு நாள், இரு நாள் அல்ல, பல நாட்கள் இது தொடர்ந்தது. அவனுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் இது நடந்தது.. இது பற்றி சிந்தித்த யாதவர்கள், ஒரு நாள், பால் குடம் கொண்டு  வரும் போது, நினைவாக‌, அந்தக் குறிப்பிட்ட கல் இடறும் முன்பே, மண்வெட்டி கொண்டு அந்த இடத்தை வெட்டினர். பீறிட்டடித்தது குருதி வெள்ளம்!.. அந்த இடம் முழுவதும் செந்நிறக் காடாகியது!.. யாதவர்கள், இது தெய்வ சக்தியின் இருப்பிடம் என்பதை உணர்ந்தனர். அம்பலக்காரரான மலையரசன் என்பவர், செய்தியறிந்து, அந்த இடத்திலிருந்து கல்லை, முழுவதுமாக வெளியே எடுக்க வைத்தார்.

வெளிப்பட்டது கல்லல்ல.. கல் உருவில், கருணை உருவான அம்மன், கண்ணுடையாளாக வெளிப்பட்டாள்.. (இவ்வாறு, கல் இடறும்படி செய்து, தன்னைக் கண்ணுற வைத்ததாலும் அம்மன் 'கண்ணுடையாள்' ஆனாள் என்றும் ஒரு பெயர்க் காரணம் கூறுகின்றார்கள்.) அந்த நேரத்தில் ஒருவருக்கு அருளாவேசம் வந்து, அவர் மூலமாக 'நான் கண் கொடுக்கும் தெய்வமாக இருப்பேன்!' என்று அம்மன் வாக்களித்தாள்.. இன்றளவும் அவ்வண்ணமே, பக்தர்களின் விழிமலர்களைக் காத்து வருகிறாள் கண்ணாத்தாள்..

அங்கிருந்து எடுத்து வரப்பட்டு, அன்னை முதலில் சிவன் கோயிலிலேயே வைக்கப்பட்டாள். மறு நாள் அன்னை, வடக்கு நோக்கித் திரும்பியிருக்கக் கண்டு, இதுவே அவள் திருவுளம் என்று, தனிக் கோயிலில் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்கள்..

திருவிழாக்கள்:

வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது... வைகாசி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றமும், சுவாதி நட்சத்திரம் சேர்ந்த தினத்தில், அந்தி வேளையில், களியாட்டக் கண்ணாத்தாள் எழுந்தருளிய வெள்ளி ரத பவனியும் நடைபெறுகிறது. மறு நாள் விசாகத்தன்று தேர் பவனியும் நடைபெறுகிறது..

ஆடி மாதம், முளைக்கொட்டு உற்சவமும், புரட்டாசி மாதம், நவராத்திரி உற்சவமும் (ஒன்பது தினங்கள்), ஐப்பசி மாதம், ஒன்பது தினங்களுக்கு கோலாட்டத் திருநாளும், திருக்கார்த்திகை தினத்தன்று தீபத் திருவிழாவும், தை மாதம் ஒன்பது தினங்களுக்கு தைலக் காப்பு உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தை மாதம் செவ்வாய் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தை மாதம் முதல் செவ்வாய் அன்று, சன்னதி வீதியில், எவ்வித வேறுபாடும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடி, வரிசையாக பானைகள் வைத்து பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். ஒரு வேளை, தை மாதப் பிறப்பு, செவ்வாய் கிழமை வந்தால், அடுத்த செவ்வாயன்று இவ்வழிபாடு செய்யப்படுகின்றது.

இவை வருடாந்தர உற்சவங்கள். இவை தவிர, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 'களியாட்டத் திருவிழா' மிகச் சிறப்பானதாகும்.. முதன் முதலில், பூமியிலிருந்து எடுக்கப்பட்டவுடனேயே, அன்னையின் திருவடிவை நகர்த்த முடியாமல் போக, ஒரு பக்தரின் அருள்வாக்கில், அன்னை இவ்விழாவைக் கொண்டாடும்படி பணித்து, அதன் பின்னரே, தன்னை அங்கிருந்து நகர்த்த முடியும் எனச் சொன்னதாகவும் அதன் படி, இது செய்யப்படுவதாகவும் தல புராணம் சொல்கிறது. மிக விரிவான நியமங்களை உள்ளடக்கிய இந்த விழாவின் போது, அன்னையின் மறக் கருணை வெளிப்படும் வகையில், அசுர கணங்களை வேட்டையாடும் பாவனையில் பலிகள் கொடுக்கப்படுகின்றன. கடைசியாக , இந்தத் திருவிழா, சென்ற 1995ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழா,  இப்பகுதியில், இந்த அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் திருவிழாவாகும்..

கோயிலின் பூஜைகள், பாரசைவர்களால் செய்யப்படுகின்றது. அம்மனுக்கு கண் மலர்கள் வாங்கி, சமர்ப்பித்தல் மிகச் சிறப்பான வேண்டுதல்.

நாட்டரசன் கோட்டையில், பாட்டரசனாகிய கம்பரின் சமாதிக் கோயிலும் அமைந்துள்ளது.. தன் வாழ்நாள் இறுதியில், இவ்வூர் வந்த கம்பர், இவ்வூர் எல்லையில், மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம், 'சோறு எங்கு விற்கும்?' எனக் கேட்க, 'சோறு தொண்டையில் விக்கும்!' என்று அவர்கள் பதில் கொடுத்தார்கள்.. ஞானேஸ்வரியான அம்பிகையின் அருளால், ஊர் மக்கள் அனைவரின் அறிவும் சுடர் விடுவதை உணர்ந்த கம்பர்,

'காட்டெருமை மேய்க்கின்ற காளையர்க்கு நான் தோற்றேன்- இனி இந்

நாட்டரசன் கோட்டை நமக்கு'

என்று, இவ்வூரிலேயே தம் இறுதி நாளைக் கழித்தார்.

அவர் அம்பிகை உபாசகராதலால், அவருக்கு இவ்வூரில் சமாதி கோயில் அமைந்துள்ளது. இந்த சமாதியின்  மண்ணை, குழந்தைகளுக்கு கரைத்துப் புகட்டினால், அன்னையின் அருளால், குழந்தைகள், கல்வி, கேள்விகளில் வல்லவராவர் என்பது ஐதீகம்.

அன்னையின் அருளாடல்கள் ஆயிரம் ஆயிரம்!.. மானிடர்களுக்கு மட்டுமின்றி, தன் கோயிலில் தஞ்சமடைந்த, கண்பார்வைக் குறைபாடுற்ற ஒரு யானைக்கும் அன்னை கண் பார்வை நல்கியிருக்கிறாள். கோயில் கோபுரக் கலசங்களை திருடிச் சென்றவர்கள், இவ்வூர் எல்லை தாண்டு முன்பாக, கண் பார்வை இழந்தனர். இவ்வாறு பலப் பல லீலைகளை பரவசத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள்..

அம்மனின் பெருமை சொல்லும் பாடல்களில் முதன்மை பெறுவது, அழுகுணிச் சித்தரின் பாடல்கள்.. அவற்றில், சித்தர்  'கண்ணம்மா' என்று விளிப்பது, இந்த அருள் நங்கையையே என்கிறார்கள்..

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ!

என்ற இந்தப் பாடல், அன்னையின் திருவுருவைக் குறிப்பதாகவே சொல்கிறார்கள்..

முத்துக் குட்டிப் புலவர் இயற்றிய, 'ஸ்ரீகண்ணுடையம்மன் பள்ளு' மிகச் சிறந்த சிற்றிலக்கியம்!..

ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில், காலை 7.15 மணி முதல், பிற்பகல் ஒரு மணி வரையும், மாலை 4.15 முதல், இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்..